ஓமலூர் பகுதியில் அறுவடை பணிகள் தீவிரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி


ஓமலூர் பகுதியில் அறுவடை பணிகள் தீவிரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 7:03 PM GMT)

ஓமலூர் பகுதியில் பூக்கள் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஓமலூர், 

ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏக்கர் கணக்கில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் பூக்கள் விளைச்சலுக்கான மண் வளமும், தண்ணீர் வளமும், இயற்கை வளமும் உள்ளதால் இங்கு பூக்கள் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் பூக்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், திருப்பதி தேவஸ்தானம் மற்றும் பெங்களூருவுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

விவசாயிகள் பெரும்பாலும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, அக்டோபர் மாதங்களில் பூக்களை சாகுபடி செய்வது வழக்கம். அவ்வாறு சாகுபடி செய்யப்படும் பூக்கள் புரட்டாசி மாதத்திலும், அதனை தொடர்ந்து ஆயுத பூஜை, தீபாவளி, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல் ஆகிய நாட்களில் அறுவடைக்கு தயாராகும் வகையில் பூக்கள் விளைச்சல் இருக்கும்.

இந்த நிலையில் தற்போது ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின்றி வறட்சி நிலவினாலும் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு விவசாயிகள் பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றியும் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் பூக்கள் பூசாரிப்பட்டி பூ மார்க்கெட், சேலம் தேர்முட்டி பூ மார்க்கெட் ஆகிய இடங்களுக்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு செல்கிறார்கள். மேலும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் பூக்களை மாலையாக தொடுத்தும் விற்பனை செய்து வருகிறார்கள்.

இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓமலூர் பகுதிகளில் பூக்கள் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பூக்கள் விலையும் உயர்ந்துள்ளதால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காடையாம்பட்டி, பூசாரிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, தாராபுரம், கொங்குபட்டி, காருவள்ளி, மூக்கனூர், குண்டுகல், டேனிஸ்பேட்டை, நடுப்பட்டி, கொங்காரப்பட்டி, கணவாய்புதூர், தும்பிபாடி, பொட்டியபுரம், காமலாபுரம், தாத்தியம்பட்டி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மலர் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக சாமந்தி, சாந்தினி, கோழிக்கொண்டை, நாட்டு சாமந்தி, வைலட், பூர்ணிமா மஞ்சள், பூர்ணிமா வெள்ளை, பேப்பர் ஒயிட், மொரூன் சிகப்பு ராஜமலர் உள்ளிட்ட பூக்கள் விளைவிக்கப்படுகிறது.

தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் அறுவடை பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணியில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகிறார்கள். கடந்த 20 நாட்களுக்கு முன்பு பூசாரிப்பட்டி பூ மார்க்கெட்டில் சாமந்தி, சாந்தினி போன்ற பூக்கள் கிலோ ரூ.30 வரை மட்டுமே விலை போனது. ஆனால் தற்போது பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதன்படி சாமந்தி, சாந்தினி பூக்கள் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. இங்கு விற்பனையாகும் பூக்களை வியாபாரிகள் ஆர்டரின் பேரில் தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கின்றனர்.

மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் பூக்களை வாங்கி திருமணம், கோவில் கும்பாபிஷேகம் போன்ற அனைத்து விழாக்களுக்கும் மாலையாக கட்டி விற்கின்றனர். வெளியூரில் இருந்து வந்து கூட திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு ஆர்டரின் பேரில் மாலைகளை வாங்கி செல்கின்றனர். தற்போது விலை உயர்ந்து இருந்தாலும், அடிக்கடி விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பூக்கள் விற்பனையாகாத நாட்களில் சேமித்து வைக்கவும் வழி இல்லை.

எனவே இந்த பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை (சென்ட் பேக்டரி) அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இதுவரை இதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே விவசாயிகளின் நலன் கருதி பூசாரிப்பட்டியை மையமாக கொண்டு சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story