பாலிதீன் பைகளுக்கு தடை எதிரொலி; கறம்பக்குடி பேரூராட்சியில் 80 சதவீத பிளாஸ்டிக் குப்பைகள் குறைந்தன


பாலிதீன் பைகளுக்கு தடை எதிரொலி; கறம்பக்குடி பேரூராட்சியில் 80 சதவீத பிளாஸ்டிக் குப்பைகள் குறைந்தன
x
தினத்தந்தி 11 Jan 2019 11:37 PM GMT (Updated: 11 Jan 2019 11:37 PM GMT)

பாலிதீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் 80 சதவீத பிளாஸ்டிக் குப்பைகள் குறைந்துள்ளன. இதனால் இயற்கை உரம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கறம்பக்குடி,

தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இதற்கு மாற்றான பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தினமும் சுமார் 2 டன் அளவிற்கு குப்பைகள் துப்புரவு பணியாளர்களால் சேகரிக்கப்படும். இதில் 100 கிலோவிற்கு மக்காத தன்மையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் இருக்கும். இதை பிரித்து எடுப்பதில் துப்புரவு தொழிலாளர்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனால் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உரக்கிடங்கில் இயற்கை மற்றும் மண்புழு உரங்களை தயாரிப்பது தொழிலாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது. இந்த நிலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கறம்பக்குடி பேரூராட்சியில் 80 சதவீதத்திற்கு மேல் பிளாஸ்டிக் குப்பைகள் குறைந்துள்ளன.

இதையடுத்து உரக்கிடங்கில் இயற்கை மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருகின்றனர். ரசாயன கலப்பற்ற இயற்கையான உரம் தயார் ஆவதால் விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து கறம்பக்குடி பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

அரசின் தடை உத்தரவாலும், பேரூராட்சியின் மூலம் தீவிர சோதனை நடத்தப்படுவதாலும் கறம்பக்குடியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் இயற்கை உரம் தயாரிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இயற்கை உரம் கிலோ ரூ.3-க்கும், மண்புழு உரம் ரூ.10-க்கும் விற்கப்படுகிறது. விவசாயிகள் உரக்கிடங்கிற்கு வந்து பெற்றுச் செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story