3 மாதம் சம்பளம் தராமல் ஏமாற்றி தலைமறைவான ஆவின் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், ஊழியர்கள் புகார் மனு


3 மாதம் சம்பளம் தராமல் ஏமாற்றி தலைமறைவான ஆவின் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், ஊழியர்கள் புகார் மனு
x
தினத்தந்தி 12 Jan 2019 10:30 PM GMT (Updated: 12 Jan 2019 2:32 PM GMT)

3 மாதம் சம்பளம் தராமல் ஏமாற்றி தலைமறைவான ஆவின் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒப்பந்த ஊழியர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

வேலூர், 

வேலூர் சத்துவாச்சாரியில் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) இயங்கி வருகிறது. இங்கு வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஆவினில் கடந்த மாதம் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்த 20–க்கும் மேற்பட்டோர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:–

நாங்கள் கடந்த ஓராண்டாக ஆவினில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்தோம். வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த 2 பெண் ஒப்பந்ததாரர்களின் கீழ் ஆவினில் பணிபுரிந்தோம். இந்த நிலையில் ஒப்பந்ததாரர்கள் கடந்த 3 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் வழங்காமல் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்து ஆவின் நிர்வாகம் மற்றும் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம்.

அதன்பேரில் போலீசார் ஒப்பந்ததாரர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் சில நாட்களில் சம்பளத்தை வழங்க ஏற்பாடு செய்வதாகவும், மேலும் எங்களை தொடர்ந்து பணிபுரியும்படி கூறினர். அதன்படி நாங்களும் தொடர்ந்து ஆவினில் வேலை பார்த்தோம். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் 3 மாத சம்பளத்தை கொடுத்தனர். மீதமுள்ள பலருக்கு சம்பள பாக்கி வைத்தனர்.

இந்த நிலையில் பெண் ஊழியர் ஒருவர் கடந்த மாதம் சம்பள பாக்கியை கேட்ட போது, அவரை ஒப்பந்ததாரர் மற்றும் அவருடைய உறவினரும் சேர்ந்து தாக்கினர். அதைத்தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்ததாரர்கள், 44 ஒப்பந்த ஊழியர்களுக்கு தர வேண்டிய ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் சம்பள பாக்கியை கடந்த மாதம் 17–ந் தேதி தருவதாக கூறினர்.

இதற்கிடையே ஆவின் நிர்வாகம் கடந்த மாதம் 12–ந் தேதி 2 ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தத்தையும் திடீரென ரத்து செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து 2 ஒப்பந்ததாரர்களும் தலைமறைவாகி விட்டனர். சம்பளம் வழங்காததால் எங்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளது.

எனவே எங்களை வைத்து வேலை வாங்கிவிட்டு சம்பள பாக்கி வழங்காமல் ஏமாற்றி தலைமறைவான 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களுக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியையும் பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.


Next Story