வழிப்பாதையை மூடுவதற்கு எதிர்ப்பு: ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம் கடலூரில் பரபரப்பு
ரெயில்வேக்கு சொந்தமான இடத்தின் வழியாக செல்லும் வழிப்பாதையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர்,
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தின் அருகே உள்ள குப்பன்குளம் பகுதி மக்கள் ரெயில் நிலையத்தின் கிழக்கு பகுதியில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தை வழிப்பாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் ரெயில் நிலையத்தை ஆய்வு செய்ய வந்த திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி பாதுகாப்பு கருதி ரெயில்வேக்கு சொந்தமான இடத்தின் வழியாக செல்லும் வழிப்பாதைகளை மூடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி குப்பன்குளம் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் உள்ள பாதையை மூட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பாதையை மூடினால் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர். நேற்று ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் உள்ள பாதையை மூடும்பணிக்காக கட்டுமான ஊழியர்கள் வந்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்காக ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் தினகரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
பாதை மூடப்படுவதை கண்டித்து தி.மு.க. நகர செயலாளர் கே.எஸ். ராஜா தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் அமர்நாத் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் சாலை மறியல் செய்வதற்காக திரண்டனர். பின்னர் சாலை மறியலை கைவிட்டு குப்பன்குளம் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தண்டவாளத்தில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதுபற்றிய தகவல் அறிந்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் போலீசார் அங்கே விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தற்காலிகமாக குப்பன்குளம் பகுதிக்கு ஆட்டோக்கள் வந்து செல்லும் வகையில் வழிப்பாதைவிட்டு விட்டு சுவர் அமைக்க இருப்பதாகவும், சப்-கலெக்டர் தலைமையில் அமைதி கூட்டம் நடத்தி நிரந்தரபாதை வசதிக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போராட்டம் நடந்த சமயத்தில் அந்த வழியாக ரெயில் ஏதும் வரவில்லை. இருப்பினும், தண்டவாளத்தில் அமர்ந்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story