போளூரில் இருந்து கேரளாவுக்கு லாரியில் ஏற்றிச்சென்ற 37 மாடுகள் பறிமுதல் டிரைவர், கிளனர் கைது


போளூரில் இருந்து கேரளாவுக்கு லாரியில் ஏற்றிச்சென்ற 37 மாடுகள் பறிமுதல் டிரைவர், கிளனர் கைது
x
தினத்தந்தி 13 Jan 2019 10:45 PM GMT (Updated: 13 Jan 2019 3:54 PM GMT)

போளூரில் இருந்து கேரளாவுக்கு லாரியில் ஏற்றிச்சென்ற 37 மாடுகளை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவர், கிளனரை கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மாடுகளை சித்ரவதை செய்யும் வகையில் ஏற்றி செல்வதாக திருவண்ணாமலை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கால்நடை பராமரிப்பு துறையினர் திருவண்ணாமலை - வேலூர் ரோடு துர்கை நம்மியந்தல் டோல்கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில், லாரியில் பெரிய காளைகள் 21, பசு மாடுகள் 2, எருமை மாடு 1 மற்றும் எருமை கன்றுகள் 13 என மொத்தம் 37 மாடுகள் ஒன்றின் மேல் ஒன்று நின்று ஊனம் ஏற்படும் வகையிலும், சித்ரவதை செய்யும் வகையிலும் கொண்டு செல்வது தெரியவந்தது.

இதையடுத்து கால்நடை பராமரிப்பு துறையினர் மாடுகளுடன் அந்த லாரியை பறிமுதல் செய்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த மாடுகள் போளூர் தேப்பனந்தல் சந்தையில் வாங்கி கேரளாவுக்கு ஏற்றிச்செல்வதும், மாடுகளுக்கு போதிய இட வசதி மற்றும் உணவு, தண்ணீர் வசதி செய்யவில்லை என்பதும் தெரியவந்தது.

பின்னர் கால்நடைகள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேரள மாநிலம் பாலக்கோடு கொடிமனூர் புத்தனூர் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சையதுமுகமது (வயது 40), விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கருவாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கிளனர் கோபி (33) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட காளை, பசு மாடுகள் அருணாசலேஸ்வரர் கோவில் கோசாலையிலும், எருமை மாடுகள் அருணாசலேஸ்வரர் கோவில் திருமஞ்சன கோபுரம் அருகிலும் கட்டப்பட்டு உள்ளன.

Next Story