நெமிலி அருகே டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து ரூ.1½ லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை மினிவேனில் மர்ம நபர்கள் எடுத்துச்சென்றனர்
நெமிலி அருகே டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 29 பெட்டிகள் கொண்ட மதுபாட்டில்களை மர்ம நபர்கள் மினிவேனில் எடுத்துச்சென்றனர்.
பனப்பாக்கம்,
வேலூர் மாவட்டம் நெமிலியை அடுத்த புன்னை கிராமத்தில் உள்ள வயல்வெளியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் விற்பனையாளராக கோபால் என்பவரும், மேற்பார்வையாளராக செங்குட்டுவன் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் இரவு அந்த கடைக்கு லாரியில் மதுபாட்டில்கள் வந்தன.
அவற்றை கடைக்குள் வைத்து விட்டு இரவில் கடையை பூட்டிவிட்டு விற்பனையாளரும், மேற்பார்வையாரும் வீட்டிற்கு சென்றனர். இந்த நிலையில், நேற்று காலையில் வயல்வெளி வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள், விற்பனையாளருக்கும், மேற்பார்வையாளருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் 2 பேரும் கடைக்கு வந்து பார்த்த போது மர்ம நபர்கள் கடையின் ஷட்டரை உடைத்து ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 640 மதிப்புள்ள 29 பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்ம நபர்கள் மினிவேனை எடுத்து வந்து டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த மதுபாட்டில்களை ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
இதுபற்றி அறிந்ததும் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன் அங்கு விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story