கோவில்பட்டி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,800-க்கு விற்பனை


கோவில்பட்டி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,800-க்கு விற்பனை
x
தினத்தந்தி 13 Jan 2019 10:30 PM GMT (Updated: 13 Jan 2019 5:06 PM GMT)

கோவில்பட்டி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கோவில்பட்டி, 

பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளுக்கு படையெடுத்து வருகிறார்கள். கோவில்பட்டி மார்க்கெட் ரோட்டில் உள்ள நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி மார்க்கெட்டில் நேற்று பொதுமக்கள் காய்கறிகள் வாங்க குவிந்தனர். அவர்கள் தங்களின் வீடுகளுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறி விலைகள் உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.40-க்கும், கத்தரிக்காய் ரூ.40 முதல் ரூ.45-க்கும், ஒட்டச்சத்திரம் கத்தரிக்காய் ரூ.25 முதல் ரூ.30-க்கும், அவரைக்காய் ரூ.35 முதல் ரூ.40-க்கும், புடலங்காய் ரூ.40 முதல் ரூ.45-க்கும், காரட் ரூ.15 முதல் ரூ.20-க்கும், பீட்ரூட் ரூ.25 முதல் ரூ.30-க்கும், வெண்டைக்காய் ரூ.35 முதல் ரூ.40-க்கும், நாட்டு வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40-க்கும், பல்லாரி ரூ.15 முதல் ரூ.20-க்கும், 5 வாழை இலைகள் ரூ.25 முதல் ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோவில்பட்டி மார்க்கெட் வளாகம் வெளிப்புறத்தில் உள்ள வாழைத்தார் ஏலக்கடைக்கு தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்கள் வரத்து கடந்த ஆண்டை விட சற்று குறைந்து உள்ளது.

வாழைத்தார் ஏலக்கடையில் 80 பழங்கள் கொண்ட நாட்டு வாழைத்தார் ரூ.250 முதல் ரூ.300-க்கும், 150 பழங்கள் கொண்ட கற்பூரவல்லி தார் ரூ.400 முதல் ரூ.450-க்கும், 80 பழங்கள் கொண்ட கோழிக்கூடு வாழை தார் ரூ.250 முதல் ரூ.300-க்கும், 150 பழங்கள் கொண்ட கதலி தார் ரூ.150 முதல் ரூ.200-க்கும், 130 பழங்கள் கொண்ட சக்கை தார் ரூ.350 முதல் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கோவில்பட்டி மார்க்கெட் ரோடு மற்றும் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் கீழரத வீதியில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை உயர்ந்து உள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.1,300-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ நேற்று ரூ.500 உயர்ந்து ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ரோஜா பூ ரூ.180-க்கும், ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 200 கிராம் பிச்சி பூ நேற்று ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிவந்தி பூ ரூ.140-க்கும், தர சிவந்தி ரூ.110-க்கும், சம்பங்கி ரூ.140-க்கும், லோக்கல் சம்பங்கி ரூ.120-க்கும், கோழிப்பூ ரூ.50-க்கும், ஓசூர் கலர் ரோஜா ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Next Story