அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த லேப் டெக்னீசியன் பணிநீக்கம் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த லேப் டெக்னீசியன் பணிநீக்கம் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2019 10:15 PM GMT (Updated: 13 Jan 2019 5:20 PM GMT)

ஓமலூர் அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த லேப் டெக்னீசியன் பணிநீக்கம் செய்யப்பட்டார். பொதுமக்களும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர், 

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 2 வயது பெண் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக சிகிச்சை பெற கூலித்தொழிலாளி, அவருடைய மனைவி ஆகியோர் குழந்தையை எடுத்துக்கொண்டு நேற்று காலை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்க டாக்டரிடம் காண்பித்தனர். அப்போது டாக்டர், குழந்தையை பரிசோதித்து விட்டு ரத்தப்பரிசோதனை செய்யும்படி கூறினார்.

இதையடுத்து பெற்றோர் குழந்தையை ரத்தப்பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த லேப் டெக்னீசியன் சாமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த யோகானந்த் (வயது 35) என்பவர் குழந்தையையும், தாயையும் உள்ளே அழைத்து ரத்தப்பரிசோதனை செய்ய முயன்றார். குழந்தையின் தந்தை வெளியே உட்கார்ந்து இருந்தார். சிறிதுநேரத்தில் அந்த குழந்தையின் தாய் பதறியடித்தபடி அந்த அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். இதுபற்றி அந்த பெண்ணிடம் கேட்டபோது, ரத்தப்பரிசோதனை செய்ய முயன்றபோது அங்கிருந்த லேப் டெக்னீசியன் யோகானந்த் தன்னிடம் சில்மிஷம் செய்ததாக கூறினார்.

இதுபற்றி அறிந்ததும் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். பெண்ணிடம் சில்மிஷம் செய்த லேப் டெக்னீசியனை சுற்றி வளைத்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் மருத்துவமனையை முற்றுகையிட்டு, லேப் டெக்னீசியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஓமலூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பெருமாள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் லேப் டெக்னீசியன் யோகானந்த்தை பணிநீக்கம் செய்து சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சத்யா உத்தரவிட்டுள்ளார். பணிநீக்கம் செய்யப்பட்ட யோகானந்த், அம்மா ஆரோக்கிய திட்டத்தில் மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக வேலைபார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story