வெளிநாட்டு பறவைகளின் வருகையால் சரணாலயமாக மாறிய பண்ணவாடி பரிசல்துறை


வெளிநாட்டு பறவைகளின் வருகையால் சரணாலயமாக மாறிய பண்ணவாடி பரிசல்துறை
x
தினத்தந்தி 13 Jan 2019 10:00 PM GMT (Updated: 13 Jan 2019 7:19 PM GMT)

வெளிநாட்டு பறவைகளின் வருகையால் பண்ணவாடி பரிசல் துறை பறவைகளின் சரணாலயமாக மாறி இருக்கிறது.

கொளத்தூர், 

மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியாக பண்ணவாடி பரிசல் துறை உள்ளது. சேலம் மாவட்டத்தையும், தர்மபுரி மாவட்டத்தையும் நீர் வழி போக்குவரத்து மூலம் இணைக்கும் இடம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் புராதன நினைவு சின்னங்களான கிறிஸ்தவ கோபுரம், நந்தி சிலை, ராஜா கோட்டை போன்றவற்றை உள்ளடக்கிய இடம் ஆகும். மேலும் மீன்களை சுவைக்க வரும் மீன் பிரியர்களின் ‘மினி‘ ஒகேனக்கல்லாகவும் பண்ணவாடி பரிசல் துறை விளங்கி வருகிறது.

இந்தநிலையில் தற்போது வெளிநாட்டு பறவைகள் இந்த பரிசல் துறைக்கு கூட்டம் கூட்டமாக வருகின்றன. இவ்வாறு வெளிநாட்டு பறவைகள் வருவதால் பண்ணவாடி பரிசல் துறை பறவைகள் சரணாலயம் போல் மாறியுள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 75 அடியாக குறைந்துள்ள நிலையில் காவிரி கரையோரங்களில் குவிந்துள்ள கிளிஞ்சல்களை சாப்பிடவும், மீன்களை இரையாக்கி கொள்ளவும், ஆயிரக்கணக்கான கொக்குகளும், நாரைகளும், நீண்ட மூக்குகளை கொண்ட வித்தியாசமான பறவைகளும் இங்கு முகாமிட்டுள்ளன. இதனால் பண்ணவாடி நீர்தேக்கப் பகுதி முழுவதும் பறவைகளாக காட்சியளிக்கின்றன.

இந்த பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் இப்பறவைகளை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். மேலும் இங்கு மீனவர்களால் விரிக்கப்பட்டுள்ள வலைகளில் உள்ள மீன்களை இந்த பறவைகள் இரையாக்கி கொள்வதில்லை. மாறாக கரைகளில் கிடக்கும் கிளிஞ்சல்களையும், இறந்து மிதந்து வரும் மீன்களையே கொத்தி சாப்பிடுகின்றன என அப்பகுதி மீனவர்கள் ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர். வெளிநாட்டு பறவைகளின் வருகையால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் பண்ணவாடி பரிசல் துறையில் அதிகரித்துள்ளது.

இதுபற்றி பண்ணவாடி பரிசல் துறையில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

பண்ணவாடி பரிசல்துறைக்கு சுவை மிகுந்த மீன்களை சாப்பிட நாங்கள் வந்தோம். ஆனால் இங்கு வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இது மிகவும் அழகாக உள்ளது. இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் குறையும்போது வெளிநாட்டு பறவைகள் இங்கு வருவதை காண முடிகிறது. ஆகையால் இந்த பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story