தமிழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார் ‘புதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது’ பிரதமர் மோடி பேச்சு


தமிழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார் ‘புதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது’ பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 14 Jan 2019 5:00 AM IST (Updated: 14 Jan 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

தமிழக பாரதீய ஜனதா நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, புதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது என்று கூறினார்.


தமிழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்

‘புதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது’
பிரதமர் மோடி பேச்சு


தேனி,

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால், தமிழகத்தில் பாரதீய ஜனதாவை பலப்படுத்தும் நடவடிக்கையில் பிரதமர் மோடி மும்முரமாக ஈடுபட்டு உள்ளார்.

இது தொடர்பாக கடந்த 10-ந் தேதி அரக்கோணம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் அவர் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது, தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்து வைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

நேற்று தேனி, சிவகங்கை, விருதுநகர், பெரம்பலூர், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்

கலந்துரையாடலின் போது மோடி கூறியதாவது:-

18 முதல் 20 வயது வரையுள்ள இளம் வாக்காளர்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்கள். இந்த வயதுடையவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டால்தான் அவர்கள் வாக்களிக்கும் தகுதியை பெறுவார்கள். அவர்களை வாக்காளர்களாக பதிவு செய்வதும் நமது (பா.ஜ.க.வினர்) வேலைதான். முதல் முறை வாக்களிக்க உள்ள புதிய வாக்காளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களின் வாக்குகளை நாம் பெற முயற்சிக்க வேண்டும்.

ஏனெனில் அவர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது. பரம்பரை ஆட்சியை வெறுக்கும் அவர்கள் வளர்ச்சியின் மீது மட்டுமே அக்கறை கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வாக்குறுதிகளை ஏற்க மாட்டார்கள். ஆனால், செயல்பாட்டில் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு வாய்ஜாலம், நாடகம் எல்லாம் பிடிக்காது. அரசு சிறப்பாக செயல்படுகிறதா? என்றுதான் பார்ப்பார்கள்.

என்னை பற்றியோ, பாரதீய ஜனதா அரசை பற்றியோ குறை கூற எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு இல்லை. எனவே அரசியலில் தங்கள் இருப்பை உறுதி செய்துகொள்வதற்காக பாரதீய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைக்கின்றன. வெற்று வாக்குறுதிகளை கொடுத்து மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. குறுகிய நோக்கத்தில் செயல்படும் அவர்கள் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை அமைக்க முயற்சிக்கிறார்கள். நாம் மக்களுக்கு அதிகாரம் வழங்க விரும்புகிறோம்.

அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் தூய்மை இந்தியா திட்டம், வீட்டு வசதி திட்டம், முத்ரா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பாரதீய ஜனதா அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்றாலே புதிய வாக்காளர்கள் பாரதீய ஜனதாவுக்குத்தான் வாக்களிப்பார்கள்.

ஜி.எஸ்.டி. வரி முறையில் சீர்திருத்தங்களை கொண்டு வந்து உள்ளோம். அதில் சிறு-குறு வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. இதனால் பல தொழில்கள் வளர்ச்சி அடையும். ஜி.எஸ்.டி. கவுன்சில் எடுக்கும் முடிவால், மேலும் பல நன்மைகள் கிடைக்கும்.

முன்னேறிய வகுப்பை சேர்ந்த ஏழை மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இருப்பதை, அனைவரும் வரவேற்கிறார்கள். இந்த செய்தியை நீங்கள் அனைவரும் வீடு வீடாக சென்று மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.


தமிழகம் தொழில்துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது. ஜவுளி தொழிலிலும் இந்தியாவின் நம்பர்-1 மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. சிறு-குறு, நடுத்தர தொழில் தொடங்குவதற்கு முத்ரா திட்டத்தில் அதிகமான கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அதிகமானோர் கடனுதவி பெற்று உள்ளனர். மத்திய அரசு சிறு-குறு, நடுத்தர தொழில் தொடங்குவதற்கு தொழில் முனைவோருக்கு 25 சதவீதம் நிதிஉதவி வழங்க முடிவு செய்து உள்ளது.

முந்தைய ஆட்சி காலத்தில் திட்டங்களுக்கு பெயர் வைப்பதற்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்களே தவிர, அவற்றை செயல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. திட்டங்களின் உண்மையான பயனாளிகள் யார் என்பது கூட யாருக்கும் தெரியாது.

4 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. 7.5 சதவீதம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. சீனாவை மிஞ்சும் அளவுக்கு பல துறைகளில் நாம் வளர்ச்சி பெற்று வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 12 செல்போன் நிறுவனங்களே இருந்தன. தற்போது 120 நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இதேபோன்று அனைத்து தொழில்களிலும் நாம் வளர்ச்சியடைந்து உள்ளோம். மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் 5 கோடி பேர் பயன்பெற்று உள்ளனர். இந்த வளர்ச்சி தொடரும்.

பாரதீய ஜனதா ஆட்சி காலத்தில் ஒரு கோடியே 25 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Next Story