லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமல் நாராயணசாமி அறிவிப்பு
லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுவையில் லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிப்டிக், சாராயஆலை, மின்திறல் குழுமம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உடனடியாக அமலுக்கு வருகிறது.
அதேபோல் முதல்கட்டமாக 8 அரசு கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கும் 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமல் செய்யப்படுகிறது. சொசைட்டியின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு அடுத்தகட்டமாக முடிவு எடுக்கப்படும்.
கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் குடியிருக்கும் பகுதியில் பட்டா பெறுவதில் பிரச்சினை உள்ளது. அதேபோல் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கல்வீட்டில் இருந்தாலும், புறம்போக்கில் வசித்தாலும் அவர்கள் குடியிருக்கும் இடத்தில் பட்டா வழங்கப்படும்.
ஏற்கனவே முடிவெடுத்தபடி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு அவர்களது வங்கிக்கணக்கில் இன்று (திங்கட்கிழமை) சேர்க்கப்படும். வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க கவர்னருக்கு மீண்டும் கோப்பு அனுப்புகிறோம். அரிசிக்கான பணத்தையும் அவரவர் வங்கிக்கணக்கில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.