கள்ளிப்பால் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை?
காரைக்குடி அருகே கள்ளிப்பால் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பைக்குடி புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 46). இவர் காரைக்குடியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி, மகன்கள்அரியக்குடியில் வசித்து வந்த நிலையில், சுந்தரம் மட்டும் புதுக்குடியிருப்பில் தனியாக வசித்து வந்தாராம்.
இந்தநிலையில் சுந்தரம் சில நாட்களாக வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டு வந்தாராம். தொடர்ந்து சுந்தரம் கள்ளிப்பாலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்பு சிறிது நேரத்தில் மனம் மாறிய அவர், காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுந்தரம் ஆஸ்பத்திரியில் உள்ளவர்களிடம் ஏதும் கூறாமல், பக்கத்து பெட்டில் இருந்தவர்களிடம் தான் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறிவிட்டாராம். ஆனால் அவர் இலுப்பைக்குடிக்கும் வந்து சேரவில்லை. அதைத்தொடர்ந்து சுந்தரம் ஆஸ்பத்திரியில் சொல்லாமல் சென்றதால் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர், சுந்தரத்தை காணவில்லை என்று சிவகங்கை போலீசில் புகார் செய்தனர். இந்தநிலையில் சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே சுந்தரம் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அழகப்பாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.