வெடிமருந்து குடோன்களுக்கு சீல் வைக்கக்கோரி மண்எண்ணெய் கேன்களுடன் லாரியை சிறை பிடித்த பொதுமக்கள் தீக்குளிக்க போவதாக கூறியதால் பரபரப்பு


வெடிமருந்து குடோன்களுக்கு சீல் வைக்கக்கோரி மண்எண்ணெய் கேன்களுடன் லாரியை சிறை பிடித்த பொதுமக்கள் தீக்குளிக்க போவதாக கூறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Jan 2019 11:15 PM GMT (Updated: 19 Jan 2019 6:52 PM GMT)

மூலனூர் அருகே வெடிமருந்து குடோன்களுக்கு சீல் வைக்கக்கோரி மண்எண்ணெய் கேன்களுடன் வந்து லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர். அப்போது தீக்குளிக்க போவதாக பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மூலனூர்,

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே கோட்டை மருதூர் ஊராட்சி பிச்சைக்கல் பட்டியில் அனுமன் எக்ஸ்புளோசிவ் என்ற பெயரில் 7 வெடிமருந்து குடோன்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த வெடிமருந்து குடோன்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த குடோன்கள் செயல்படாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் வெடிமருந்து குடோனுக்கு ஒரு லாரியில், வெடிமருந்துகள் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல்அறிந்ததும் பிச்சைக்கல்பட்டி, தூங்கன்வலசு, மாதவநாயக்கன்பட்டி உள்பட 10 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மண்எண்ணெய் நிரப்பப்பட்ட கேன்களுடன் அந்த குடோனுக்கு சென்றனர். பின்னர் வெடிமருந்து கொண்டு சென்ற லாரியை சிறை பிடித்தனர்.

அதன்பின்னர் பிச்சைக்கல்பட்டி–வடுகபட்டி சாலையில் மண்எண்ணெய் கேன்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல்அறிந்ததும் தாராபுரம் தாசில்தார் சிவக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி, மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தாசில்தார் சிவக்குமாரை, காருடன் பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குடோன்கள் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

இந்த பகுதியில் வெடிமருந்து குடோன் அமைக்க கூடாது என்று நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். எங்களது போராட்டத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை. இதனால்தான் வெடிமருந்து குடோன்களுக்கு வெடிமருந்துகள் லாரியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த வெடிமருந்து குடோன்களை உடனே சீல் வைக்க வேண்டும்.

எங்கள் பகுதியில் வெடிமருந்து குடோன் இருக்க கூடாது. பல்வேறு இடங்களில் வெடிமருந்து குடோன்கள் வெடித்து சிறதும்போது பொதுமக்கள் பலியாகிறார்கள். எனவே இந்த வெடிமருந்து குடோன் வெடித்து சிதறினால் நாங்கள் அதற்கு பலியாக வாய்ப்பு உள்ளது. குடோனை சீல் வைக்கும் வரை போராட்டம் தொடரும். இல்லை என்றால் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் தாசில்தார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.


Next Story