நாடார்வலசை– ராமநாதபுரம் இடையே சோகையன்தோப்பு வழியாக அரசு பஸ் இயக்க கோரிக்கை
நாடார் வலசையில் இருந்து சோகையன்தோப்பு வழியாக ராமநாதபுரத்துக்கு அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பனைக்குளம்,
பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் சோகையன் தோப்பு. இந்த கிராமத்தில் அதிக அளவில் பனை தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ராமநாதபுரம் செல்ல வேண்டும் என்றால் சுமார் 1½ கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து பனைக்குளம் பஸ் நிலையத்திற்கு வரவேண்டும்.
பின்னர் அங்கிருந்து பஸ்சில் ஏறி ராமநாதபுரம் செல்லவேண்டிய நிலை உள்ளது. இதையடுத்து இப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அரசு பஸ் விடப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் தங்குதடையின்றி ராமநாதபுரம் சென்று அவர்களது பணிகளை முடித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது அரசு டவுன் பஸ் தடம் எண் 30 தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் சோகையின்தோப்பு, கிருஷ்ணாபுரம், புதுக்குடியிருப்பு, கடற்கரைப்பகுதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் முகமது பைசல், செயலாளர் சகாபுதீன், தலைவர் நிஜாமுதீன் ஆகியோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் சோகையன்தோப்பு பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த தடம் எண் 30 அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.