படப்பை அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி


படப்பை அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 20 Jan 2019 10:30 PM GMT (Updated: 20 Jan 2019 5:00 PM GMT)

படப்பை அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.

படப்பை,

தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் ஏரிக்கரை அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 19). படப்பையை அடுத்த வஞ்சுவாஞ்சேரி அன்னை சத்யா நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (20). சென்னை மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரதாபன் (18). தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களான இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சோமங்கலம் பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.

படப்பையை அடுத்த சோமங்கலம் எட்டையாபுரம் பகுதியில் உள்ள சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரி அருகே செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் சென்று கொண்டிருந்த மொபட் மீது மோதியது. மோட்டார் சைக்கிளில் படப்பையை அடுத்த சோமங்கலம் பகுதியில் உள்ள மேட்டூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சகோதரர்களான சஞ்சய் குமார், (19) சதீஷ் (17) இருந்தனர். இவர்கள் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து விட்டு தாம்பரத்தில் இருந்து சோமங்கலம் பகுதியில் உள்ள வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

விபத்து குறித்து அந்த வழியாக வந்தவர்கள் சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்து துடித்து கொண்டிருந்த விக்னேஷ், ஹரிகிருஷ்ணன், சஞ்சய் குமார், சதீஷ் ஆகியோரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் நேற்று காலை விபத்து நடந்த பகுதியின் அருகே தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் ஒருவர் கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இதையடுத்து அங்கு வந்த போலீசார் தலையில் பலத்த காயம் அடைந்த நபரை பார்த்தபோது அவர் விபத்தில் பலியாகி இருப்பது தெரியவந்தது.

போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை செய்ததில் இறந்த நபர் மோட்டார்சைக்கிள்- மொபட் மோதி விபத்துக்குள்ளானதில் பலியான பிரதாபன் என்பது தெரியவந்தது விபத்து நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் சென்று அந்த பகுதியில் இறந்து கிடந்துள்ளார். என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story