பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி புதுப்பெண் சாவு கணவர் உள்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சை
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் புதுப்பெண் உயிரிழந்தார். மேலும் கணவர் உள்பட 3 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பண்ருட்டி,
கடலூர் கோண்டூரை சேர்ந்தவர் அன்பு. கூலி தொழிலாளி. இவரது மனைவி கோமதி (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆற்றுதிருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக கோமதி, தனது கணவருடன் பண்ருட்டி அருகே மாளிகம்பட்டில் உள்ள தனது தந்தை கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் அன்பு, கோமதி, மற்றும் கோமதியின் தங்கைகள் வெண்ணிலா(19), பார்வதி(15) ஆகியோர் கண்டரக்கோட்டையில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் நடந்த விழாவில் கலந்து கொள்ள சென்றனர்.
அப்போது பண்ருட்டி பணிக்கன்குப்பத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அருகே இவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக அன்பு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் 4 பேரும் படுகாயமடைந்தனர். உடன் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கோமதி பரிதாபமாக உயிரிழந்தார். அன்பு, வெண்ணிலா, பார்வதி ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 3 மாதங்களில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.