தாராபுரம் அருகே பரிதாபம்: சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியது; சிறுமி பலி


தாராபுரம் அருகே பரிதாபம்: சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியது; சிறுமி பலி
x
தினத்தந்தி 21 Jan 2019 4:30 AM IST (Updated: 21 Jan 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் சிறுமி பலியானாள். குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கள்ளிவலசை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகள் ஜனவர்ஷினி (வயது 9). இவள் தனது பாட்டி தங்கம்மாளுடன் (50) தாராபுரம்–உடுமலை சாலையில் கள்ளிவலசு பஸ் நிறுத்தம் அருகே சாலையோரமாக கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அதேபோல் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரின் மனைவி ரேவதி (23), தனது மகள் சாய்ஸ்ரீ (3) மற்றும் மகன் மோகித் (1), மற்றும் அதே ஊரை சேர்ந்த சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் ரேணுகா (18) ஆகியோரும் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிந்தார்கள்.

அப்போது அந்த வழியாக உடுமலையில் இருந்து தாராபுரம் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை உடுமலை ஜோதிநகரை சேர்ந்த காசி (53) என்பவர் ஓட்டினார். டிரைவரின் இருக்கை அருகே அவரது மனைவி கல்யாணி அமர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜனவர்ஷினி, தங்கம்மாள், ரேவதி, சாய்ஸ்ரீ, மோகித், ரேணுகா ஆகிய 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜனவர்ஷினியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பலத்த காயம் அடைந்த தங்கம்மாள், ரேவதி, சாய்ஸ்ரீ, மோகித், ரேணுகா ஆகிய 5 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்த தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்மணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் விபத்து குறித்த விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரில் உள்ள மருத்துவ அதிகாரிகளை செல்போனில் அமைச்சர் தொடர்பு கொண்டு, படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story