விக்கிரமங்கலம் அருகே கோவிலில் திருட்டுபோன வீரபத்திரர் வெண்கல சிலை ஏரியில் கண்டெடுப்பு


விக்கிரமங்கலம் அருகே கோவிலில் திருட்டுபோன வீரபத்திரர் வெண்கல சிலை ஏரியில் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 20 Jan 2019 10:45 PM GMT (Updated: 20 Jan 2019 7:37 PM GMT)

விக்கிரமங்கலம் அருகே கோவிலில் திருட்டுபோன வீரபத்திரர் வெண்கல சிலை ஏரியில் கண்டெடுக்கப்பட்டது.

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே அம்பாபூரில் பழமையான பெரிநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அம்பாபூர், விக்கிரமங்கலம் ஆகிய கிராமங்களில் உள்ள 40 குடும்ப வகையறாக்களுக்கு சொந்தமான குலதெய்வமாகும். இந்நிலையில், இந்த கோவிலில் இருந்த 1 அடி உயரமும், 5 கிலோ எடையும் கொண்ட வீரபத்திரர் சாமி வெண்கல சிலையை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மர்மநபர்கள் திருடி சென்றனர்.

இது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று அம்பாபூரில் உள்ள பெருமாள் படையாட்சி ஏரியில் இருந்து தண்ணீரை விவசாயிகள் தங்களுடைய வயல்களுக்கு மோட்டார் மூலம் இறைத்து கொண்டிருந்தனர்.

அப்போது ஏரியில், கடந்த ஆண்டு திருட்டு போன வீரபத்திரர் சிலை கிடந்ததை கண்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இது குறித்து உடனடியாக விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் வீரபத்திரர் சிலையை மீட்டு, அதனை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். சிலையை திருடிய மர்மநபர்கள் போலீசாருக்கு பயந்து சிலையை ஏரியில் வீசி விட்டு சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story