மின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் அமைச்சர் தங்கமணி பேட்டி


மின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 21 Jan 2019 4:30 AM IST (Updated: 21 Jan 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள எலந்தகுட்டையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சென்னை போன்ற மாநகராட்சிகளில் மின் வினியோக பெட்டிகள் சீர் செய்யப்பட்டு வருகின்றன. 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் வினியோக பெட்டிகள் வாங்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் 80 ஆயிரம் மின் வினியோக பெட்டிகளின் உயரம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 50 சதவீதம் பணிகள் முடிவடைந்துவிட்டன. பெரிய அளவில் மழை பெய்தாலும் அப்பெட்டிகள் பாதிக்காத வகையில் அதன் உயரம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் சீரான மின்வினியோகம் செய்யப்படும்.

பிற மாநகராட்சி பகுதிகளில் மின் வினியோக பெட்டிகள் சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் பழைய நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து மாநகராட்சிகளிலும் நிதி நிலைமைக்கு ஏற்ப புதைவட மின் கம்பிகள் மற்றும் மின் வினியோக பெட்டிகள் சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். ஏற்கனவே வினாத்தாள் வெளியானதா? என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லை என நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் 325 உதவி பொறியாளர் பணியிடங்கள் நிரப்புவதில் பிரச்சினை இல்லை. அதனைத் தொடர்ந்து வயர்மேன், போர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார். 

Next Story