வயலூர் முருகன் கோவிலில் தைப்பூச விழா நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்


வயலூர் முருகன் கோவிலில் தைப்பூச விழா நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 22 Jan 2019 4:00 AM IST (Updated: 22 Jan 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

வயலூர் முருகன் கோவிலில் நேற்று நடைபெற்ற தைப்பூச விழாவில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சோமரசம்பேட்டை,

திருச்சியை அடுத்த குமாரவயலூர் சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூசவிழா நேற்று தொடங்கியது. விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பின்னர், முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன.

பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள் காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மதியம் 1.30 மணி அளவில் முத்துக்குமாரசாமி வெள்ளி ரதத்தில் புறப்பாடாகி உய்யகொண்டான் ஆற்றிற்கு சென்றார். அங்கு சாமிக்கு தீர்த்்்்்்்தவாரி வைபவம் நடைபெற்றது. முன்னதாக அஸ்தர தேவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பின்னர் அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை கோவிலுக்கு திரும்பிய முத்துக்குமாரசாமிக்கு சர்வ அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடைபெற்றது. அதனையடுத்து முத்துக்குமாரசாமி வயலூர் வழியாக வரகாந்திடலை சென்றடைந்தார். அங்கு மண்டகப்படி பெற்ற பிறகு கீழவயலூர் தைப்பூச மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பாடாகி வடகாபுத்தூர் கிராமம் வந்து சேர்ந்தார்.

இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு வடகாபுத்தூரில் இருந்து சாமி புறப்பட்டு, உய்யகொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர், அல்லித்துறை பார்வதீஸ்வரர், சோழங்கநல்லூர்் காசிவிஸ்வநாதர், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் ஆகிய சாமிகளுக்கு சந்திப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மேலும் காலை 11 மணியளவில் 5 கிராம சாமிகளும் சோமரசம்பேட்டையில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து சோமரசம்பேட்டை தைப்பூச மண்டபத்தை வந்தடைகின்றனர்.

அதன்பிறகு பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு இரவு 7 மணியளவில் அனைத்து சாமிகளும் தங்களது கோவில்களுக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வயலூர் முத்துக்குமாரசாமி சோமரசம்பேட்டை தைப்பூச மண்டபத்தில் இருந்து புறப்பட்டு அதவத்தூர் மண்டபம் சென்றடைகிறார்.

தைப்பூசத்தையொட்டி திருச்சி ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூசத்தையொட்டி தா.பேட்டையில் உள்ள காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் சிவாலயத்தில் வள்ளி தெய்வானையுடன் உள்ள ஆறுமுகபெருமானுக்கு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. அப்போது ஆறுமுகபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து காளை வாகனத்தில் காசிவிஸ்வநாதர், காசிவிசாலாட்சி ஆகியோருடன் சோமாஸ்கந்த மூர்த்தியாகவும் பல்லக்கில் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுக பெருமான் ஆராய்ச்சி ஆற்று படுகையில் எழுந்தருளினார்.

அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டது. பின்னர் தீர்த்தவாரி நடைபெற்றது. இதேபோல தா.பேட்டையை அடுத்த தேவானூர் சண்முககிரி மலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. 

Next Story