ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி


ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 9:07 PM GMT)

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு குழந்தைகளுடன் வந்த பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.

கீழக்கரை தெற்குத்தெரு ஜமாத்தை சேர்ந்த ஏராளமானோர் நிர்வாகி முகம்மது சுபைர் தலைமையில் திரளாக வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:– கீழக்கரையில் சமீபகாலமாக போதைப்பொருட்கள் விற்பனை சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. கடந்த 10–ந் தேதி தெற்குத்தெரு ஜமாத்திற்கு உட்பட்ட ஜாமியா நகர் மசூதி அருகில் கஞ்சா வியாபாரி கச்சி மரைக்கா என்ற இம்ரான்கான் சாதம்உசேன், தாவூது ஆகிய 3 பேரும் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்த லுக்குமானுல் ஹக் என்ற வாலிபரை கொலை செய்தனர். மேலும், தங்கள் மீது யாரேனும் புகார் செய்தால் அவர்களையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி சென்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது போலீஸ் காவலில் உள்ள அவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இதேமனுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் கொடுத்தனர்.

கடலாடி தாலுகா ஓரிவயல் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் பழனிபாண்டியன் தலைமையில் சாவியான நெற்பயிர்களுடன் வந்து மனு கொடுத்தனர். அதில், ஓரிவயல் பகுதியில் ஆயிரத்து 600 ஏக்கரில் நெல்விவசாயம் செய்யப்பட்டு இருந்தது. இப்பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு நெற்பயிர்கள் சாவியாகி விட்டன. இதனால் 400 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஒருசில விவசாயிகள் பண்ணை குட்டைகளை பயன்படுத்தியும் டேங்கர் தண்ணீரை பயன்படுத்தியும் நெற்பயிரை விளைவித்து உள்ளனர். கணக்கெடுப்பதற்காக வந்த அதிகாரிகள் நன்கு விளைந்த ஒரு இடத்தை மட்டும் பார்த்துவிட்டு அனைத்து பகுதிகளும் விளைந்துவிட்டதாக அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவரின் மனைவி விஜயா(வயது33) மற்றும் அவரின் குழந்தைகள் சக்திசரவணன்(12), கனிஷ்கா(7) ஆகியோருடன் வந்தார். அப்போது விஜயா திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைக்க முயன்றார். அருகில் இருந்த போலீசார் தற்கொலைமுயற்சியை தடுத்து நிறுத்தி விஜயாவை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இதுகுறித்து விஜயா கூறியதாவது:– தமிழரசன் என்பவருடன் தனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது எனது கணவர் என்னை கைவிட்டதுடன் தான் வசித்து வந்த வீட்டையும் பறித்துக்கொண்டு நகைகள் மற்றும் கல்விசான்றிதழ்களையும் பறித்துக் கொண்டார். எனவே, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தான் வசித்த வீட்டையும், நகைகளையும், கல்வி சான்றிதழ்களையும் மீட்டு தர வேண்டும். எனது கணவர் இரட்டையூரணி ஊராட்சி கவுன்சிலராக இருந்தவர். இவ்வாறு அவர் கூறினார்.

கமுதி தாலுகா த.புனவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முத்துகிருஷ்ணன் தலைமையில் திரளாக வந்து அளித்த மனுவில், எங்கள் பள்ளியின் அருகில் அரசு மதுபானகடை இயங்கி வருகிறது. இதனால் மாணவ–மாணவிகளுக்கு குடிகாரர்களால் தொல்லை நாள்தோறும் ஏற்பட்டு வருகிறது. அந்த கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

காரேந்தல் ஊராட்சியை சேர்ந்த குமரியேந்தல் கிராம பொதுமக்கள் சார்பில் அசோக் கிருஷ்ணராஜ் என்பவர் கொடுத்த மனுவில், குமரியேந்தல் கிராமத்திற்கு பெருங்களூர் வழியாகவும் காரேந்தல் வழியாகவும் இணைப்பு சாலை அமைக்குமாறு 11 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து தொடர் போராட்டம் நடத்தினோம். இந்த நிலையில் கடந்த ஆண்டு மத்திய அரசு பிரதமர் கிராம சாலை திட்டத்தின்கீழ் ரூ.3 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கியது. இதற்கான டெண்டரும் விடப்பட்டது. டெண்டர் கால அவகாசம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் இதுவரை சாலை முழுமையாக போடப்படவில்லை. ஏற்கனவே உள்ள சாலையையும் சேதமாக்கிவிட்டனர். அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் தன்னால் பணியை முடிக்க முடியவில்லை என்று கூறுகிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சாலையை முழுமையாக போடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

பாம்பனை சேர்ந்த சிக்கந்தர் என்பவர் கொடுத்த மனுவில் வணிக நிறுவனங்களுக்கு தமிழ் பெயர் வைக்க அரசு உத்தரவு உள்ளதால் அதனை ராமநாதபுரம் மாவட்டத்தில் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மனு கொடுத்தார். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story