கார்வார் அருகே தீவு கோவில் விழாவில் பங்கேற்று திரும்பிய போது சோகம் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 8 பேர் பலி 17 பேர் பத்திரமாக மீட்பு


கார்வார் அருகே தீவு கோவில் விழாவில் பங்கேற்று திரும்பிய போது சோகம் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 8 பேர் பலி 17 பேர் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 21 Jan 2019 10:39 PM GMT (Updated: 2019-01-22T04:09:32+05:30)

கார்வார் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து 8 பேர் பலியானார்கள். மேலும் 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீவு கோவில் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பிய போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

மங்களூரு,

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் அருகே நடுக்கடலில் உள்ள தீவில் நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை கார்வார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஒரு படகில் 26-க்கும் மேற்பட்டோர் தீவில் உள்ள நரசிம்மர் கோவிலுக்கு சென்றனர். அங்கு நடந்து வரும் திருவிழாவில் கலந்துகொண்ட அவர்கள் மீண்டும் அதே படகில் கரைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

கார்வார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 3 கடல் மைல் தூரத்தில் படகு வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் கடல் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்கள் தங்களை காப்பாற்றுங்கள்.... காப்பாற்றுங்கள்.... என்று மரண ஓலம் எழுப்பினர்.

நடுக்கடலில் படகு கவிழ்ந்ததை பார்த்த சில மீனவர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். மேலும் கடலோர காவல்படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே கடலோர காவல் படையினரும் ஒரு படகில் மீட்பு பணிக்காக புறப்பட்டு வந்தனர்.

அதன் பின்னர் மீனவர்களும், கடலோர காவல் படையினரும் இணைந்து நடுக்கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய 17 பேரை மீட்டனர். பின்னர் அவர்களை மற்றொரு படகில் பத்திரமாக கரைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

பலியானவர்களின் உடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டன. மொத்தம் 8 பேரின் உடல்கள் கடற்கரையில் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. அவர்களது உடல்களை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை கசக்கி பிழியும் வகையில் இருந்தது.

மேலும் சிலரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி இரவு வரை தொடர்ந்தது.

இதற்கிடையே பலியான 8 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக கார்வார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த துயர சம்பவம் பற்றி அறிந்ததும் உத்தரகன்னடா மாவட்ட கலெக்டர் நகுல், போலீஸ் சூப்பிரண்டு விநாயகா நாயக், கார்வார் தொகுதி எம்.எல்.ஏ. ரூபாலி நாயக், கார்வார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அவர்கள் உயிரிழந்த 8 பேரின் உடல்களையும் பார்வையிட்டு விசாரித்த னர்.

விசாரணையில் பலியான 8 பேரின் பெயர்கள் தெரியவந்துள்ளது. அவர்கள் ஜெயஸ்ரீ, கணபதி, நீலேஷ், அமுல், தர்ஷன், சுரேஷ், ஆதர்ஷ், சீனிவாசா என்பது தெரியவந்தது. ஆனால் அவர்கள் எந்தப்பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து கார்வார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஒரே படகில் அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்ததும், அதனால் படகு நடுக்கடலில் கவிழ்ந்து இந்த துயர சம்பவம் நடந்ததும் தெரியவந்துள்ளது.

தீவு கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது படகு நடுக்கடலில் கவிழ்ந்து 8 பேர் பலியான சம்பவம் கார்வார் மட்டுமின்றி கர்நாடகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கார்வார் கலெக்டர் அலுவலகம் ெவளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கார்வார் அருகே நடுக்கடலில் உள்ள தீவு கோவில் திருவிழாவில் பங்கேற்க சென்றவர்களின் படகு கவிழ்ந்தது. இதுதொடர்பாக கடலோர காவல் படை மாலை 4.45 மணிக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தது. உடனே மீட்பு பணிக்காக 2 ஹெலிகாப்டர்கள், ஒரு படகு, நீச்சல் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதில் 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 8 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சிலரை தேடும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story