மாவட்ட செய்திகள்

நடமாடும் கடவுள் என அழைக்கப்பட்டவர் 111 வயது சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி மரணம் + "||" + Chittaganga Abbot Sivakumaraswamy is the death With respect to the state Today the body is buried

நடமாடும் கடவுள் என அழைக்கப்பட்டவர் 111 வயது சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி மரணம்

நடமாடும் கடவுள் என அழைக்கப்பட்டவர் 111 வயது சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி மரணம்
சித்தகங்கா மடத்தின் மடாதிபதியான 111 வயது சிவக்குமார சுவாமி நேற்று மரண மடைந்தார். அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் துமகூருவில் 900 ஆண்டுகள் பழமையான சித்தகங்கா மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்து வந்த 111 வயது சிவக்குமார சுவாமி கர்நாடக மக்களால் நடமாடும் கடவுள் என்று அழைக்கப்பட்டார். அவருக்கு வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பித்தப்பை குழாயில் அடைப்பை நீக்கும் ‘ஸ்டென்ட்’ கருவி பொருத்தப்பட்டது.

ஆயினும் அவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு (2018) டிசம்பர் மாதம் சிவக்குமார சுவாமி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு சிவக்குமார சுவாமி, துமகூரு மடத்திற்கு திரும்பினார். அங்கு வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சில நாட்களில் அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

அதே சித்தகங்கா மடத்தில் உள்ள மருத்துவமனையில் சிவக்குமார சுவாமி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர் பரமேஸ் தலைமையிலான குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதும், திடீரென மோசம் அடைவதுமாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிவக்குமார சுவாமியின் உடல்நிலை திடீரென மிகவும் மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி குமாரசாமி, எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் தங்களின் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, துமகூருவுக்கு விரைந்தனர்.

சிவக்குமார சுவாமியின் உடல்நிலை மென்மேலும் மோசம் அடைந்தது. இதையடுத்து மடத்தில் போலீசார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். மடத்தை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் சித்தகங்கா மடத்தின் பக்தர்கள் மற்றும் அங்கு கல்வி கற்கும் குழந்தைகள் மிகுந்த கவலை அடைந்தனர். இந்த நிலையில் அவர் நேற்று காலை 11.44 மணியளவில் மரணம் அடைந்ததாக மதியம் 2 மணிக்கு டாக்டர்கள் அறிவித்தனர்.

இந்த தகவலை கேட்டு மடத்தின் பக்தர்கள் மற்றும் அந்த மடத்தில் படிக்கும் குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அந்த மடமே சோகத்தில் மூழ்கியது. சிவக்குமார சுவாமியின் உடல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அங்குள்ள புதிய மடத்தில் வைக்கப்பட்டது.

முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சிவக்குமார சுவாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். சிவக்குமார சுவாமி மரணம் அடைந்த தகவல் அறிந்ததும், அவரது பக்தர்கள் சித்தகங்கா மடத்தில் குவிந்தனர். சித்தகங்கா மடத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சிவக்குமார சுவாமியின் உடல் இன்று(செவ்வாய்க் கிழமை) மாலை 4.30 மணியளவில் மடத்திலேயே முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. சிவக் குமார சுவாமியின் மறைவையொட்டி கர்நாடகத்தில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் நாளை(புதன் கிழமை) வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த 3 நாட்களில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களில் உள்ள தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.

சிவக்குமார சுவாமி, 1908-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகாவில் உள்ள வீராப்புரா கிராமத்தில் பிறந்தார். அவரது உண்மையான பெயர் சிவண்ணா. அவரது பெற்றோருக்கு அவரை சேர்த்து 13 குழந்தைகள் பிறந்தனர். அவர் பள்ளி கல்வியை துமகூருவில் முடித்தார். அங்கு படித்தபோது, சித்தகங்கா மடத்துடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. பள்ளி கல்வியை முடித்த பிறகு அவர் பெங்களூரு சென்டிரல் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பை நிறைவு செய்தார். அதன் பிறகு சித்தகங்கா மடத்தில் சேர்ந்தார்.

சித்தகங்கா மடத்தின் மடாதிபதியாக கடந்த 1930-ம் ஆண்டு பொறுப்பு ஏற்றார். 88 ஆண்டுகள் மடாதிபதியாக இருந்துள்ளார். துமகூரு மடத்தில் கல்வி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அங்கு 10 ஆயிரம் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வசதியை செய்துள்ளார். அவர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்கும் வசதியும் செய்து கொடுத்துள்ளார்.

சித்தகங்கா மடம் சார்பில் கர்நாடகத்தில் 128 கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. அவருக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டது.

பசியை போக்குதல், வறுமையை ஒழித்தல் ஆகிய பணிகளுக்காக சிவக்குமார சுவாமி தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததாக தலைவர்கள் ேபாற்றுகிறார்கள். கர்நாடகத்தில் 900 ஆண்டுகள் வரலாற்றை கொண்டுள்ள மிகப்பெரிய மற்றும் செல்வாக்கு மிகுந்தது, சித்தகங்கா மடம் என்பதும், இது கர்நாடகத்தில் பலம்வாய்ந்த லிங்காயத் சமுதாய மடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த மடத்திற்கு தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் வருகை தருகிறார்கள். சிவக்குமார சுவாமி இதுவரை 30 கோடி பக்தர்களுக்கு ஆசி வழங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. 5 லட்சம் மாணவர்களுக்கு கலாசார பாடத்தை போதித்துள்ளார். சித்தகங்கா மடம் சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்.

சிவக்குமார சுவாமி மறைவையொட்டி பக்தர்களும், அவரது கல்வி நிறுவன மாணவ-மாணவிகளும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...