நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது


நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 23 Jan 2019 4:28 AM IST (Updated: 23 Jan 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

மங்களூரு,

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் அருகே நடுக்கடலில் உள்ள தீவில் நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கார்வார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஒரு படகில் 33 பேர் தீவில் உள்ள நரசிம்மர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் அதிக பாரம் காரணமாக நடுக்கடலில் படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் கடலுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதுபற்றி அறிந்ததும் கடலோர காவல் படையினர், அந்தப்பகுதி மீனவர்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள், நடுக்கடலில் உயிருக்கு போராடிய 17 பேரை பத்திரமாக மீட்டு கரைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 8 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

மேலும் 8 பேரை உடனடியாக மீட்க முடியவில்லை. இதனால் நள்ளிரவு வரை கடலோர காவல் படையினர், மீனவர்கள் ஒன்றிணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் இரவு போதிய வெளிச்சம் இல்லாததால் தேடுதல் பணி கைவிடப்பட்டது. இதையடுத்து நேற்று காலை மீண்டும் தேடுதல் பணி தொடங்கியது. தேடுதல் பணி தொடங்கிய சிறிது நேரத்தில் ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக 4 உடல்கள் மீட்கப்பட்டது.

நேற்றைய தேடுதலில் மொத்தம் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. அவர்கள் 5 பேரின் உடல்களும் கார்வாரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். நேற்று நடந்த தேடுதல் பணியின்போது 5 பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளதால் சாவின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3 பேரின் உடல் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் இறந்திருக்கலாம் என்று கடலோர காவல் படையினர் சந்தேகிக்கிறார்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று பிணமாக மீட்கப்பட்ட 5 பேரின் பெயர் விவரம் தெரியவந்துள்ளது. அவர்கள் பரசுராம் (வயது 35), ஸ்ரேயாஸ் பவஸ்கார் (30), சஞ்சீவினி (14), சவுஜன்யா (12), கிரண் (4) என்பது தெரியவந்தது.

இதில் கிரணின் உடல் நேற்று காலை மீட்கப்பட்டது. கிரணின் தாயும் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானதும், அவருடைய உடல் நேற்று முன்தினம் மீட்கப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து கார்வார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story