சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் எடுப்பு, அலுவலக விசாரணைக்கு வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்


சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் எடுப்பு, அலுவலக விசாரணைக்கு வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 23 Jan 2019 12:06 AM GMT (Updated: 23 Jan 2019 12:06 AM GMT)

சேலம்-சென்னை இடையே அமையும் 8 வழிச்சாலைக்கு நிலம் எடுப்பது சம்பந்தமாக அலுவலக விசாரணைக்கு வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

அயோத்தியாப்பட்டணம்,

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழிச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சேலம், தர்மபுரி உள்பட 5 மாவட்டங்கள் வழியாக இந்த சாலை அமைகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யப்பட்டு கல் நடப்பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல ஆண்டுகளாக பயிர் செய்து வரும் விளை நிலங்களை விட்டுக்கொடுக்க மறுத்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் நிலம் எடுக்கப்படும் விவசாயிகள், சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள நிலம் எடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. சின்னகவுண்டா புரம் ஊராட்சியைச் சேர்ந்த 36 பேருக்கு தபால் மூலம் இந்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து சின்னகவுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராமலிங்கபுரம், சின்னகவுண்டாபுரம், ஏரிக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 8 வழிச்சாலைக்காக நிலம் எடுப்பதால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் என 50-க்கும் மேற்பட்டவர்கள் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள நிலம் எடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு நேற்று காலை 11 மணியளவில் வந்தனர்.

நிலம் எடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு சுமார் 100 அடி தூரத்தில் வந்தபோது அங்கு பாதுகாப்புக்காக நின்ற சேலம் உதவி போலீஸ் கமிஷனர் கணேசன் மற்றும் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது விவசாயிகள், நிலம் எடுப்பு தாசில்தாரை சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும், என்றனர். அதற்கு போலீசார், ஒவ்வொருவராக சென்று தாசில்தாரை சந்தித்து குறைகளை தெரிவியுங்கள், என்றனர். ஆனால் விவசாயிகள் நாங்கள் அனைவரும் ஒன்றாக சென்று தான் மனு கொடுப்போம், மாவட்ட வருவாய் அலுவலர் வரவேண்டும், என்றும் கூறினார்கள். ஆனால் போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் விவசாயிகள் அந்த அலுவலகத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.

இது பற்றிய தகவல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிலம் எடுப்பு பிரிவு தாசில்தார் சுமதி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து அங்கு நின்ற விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், தனித்தனியாக வந்து கருத்து தெரிவியுங்கள், என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் அங்கிருந்து மதியம் 2 மணியளவில் திரும்பிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story