தம்பதியை தாக்கி நகை பறித்த வழக்கு: சிகிச்சை பலன் இன்றி தையல்காரர் சாவு போலி மந்திரவாதி கைது


தம்பதியை தாக்கி நகை பறித்த வழக்கு: சிகிச்சை பலன் இன்றி தையல்காரர் சாவு போலி மந்திரவாதி கைது
x
தினத்தந்தி 24 Jan 2019 4:00 AM IST (Updated: 24 Jan 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

தம்பதியை தாக்கி நகை பறித்த வழக்கில் சிகிச்சை பெற்று வந்த தையல்காரர் பரிதாபமாக இறந்தார். போலி மந்திரவாதி கைது செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த செய்யூர் சிறுகுணம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 35). தையல்காரர். இவரது மனைவி ஜானகி (33). கணவன், மனைவி இருவரும் குழந்தை பாக்கியம் வேண்டி காஞ்சீபுரத்தை அருகே வெள்ளைக்கேட் அடுத்த தாமரைதாங்கள் பகுதியை சேர்ந்த பாபு (39), என்ற மந்திரவாதியை அணுகினர். அவர் கடந்த 20-ந் தேதி அவர்கள் இருவரையும் வரவழைத்து நள்ளிரவில் பூஜை செய்தார். அப்போது பாபு, தம்பதியை தாக்கி 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டார்.

இந்த நிலையில், போலி மந்திரவாதி பாபு தாக்கியதில் படுகாயம் அடைந்த பிரபாகரன் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிரபாகரன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையொட்டி, காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் கொலை வழக்கு, நகை பறிப்பு, ஏமாற்றுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாபுவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் திண்டிவனம் அருகே பதுங்கி இருந்த பாபுவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Next Story