மண்எண்ணெய் கிடைக்காததால் விற்பனை நிலையம் முன்பு பொதுமக்கள் போராட்டம் சேந்தமங்கலம் அருகே பரபரப்பு
சேந்தமங்கலத்தில், மண்எண்ணெய் கிடைக்காததால் விற்பனை நிலையம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சேந்தமங்கலம்,
சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் வழியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சில்லரை விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. அந்த விற்பனை நிலையத்தில் பேரூராட்சியில் உள்ள சுமார் 4 ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு மாதம் இருமுறை மண்எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. சில கார்டுதாரர்களுக்கு மண்எண்ணெய் கிடைக்காததால் ஒரே நாளில் அந்த விற்பனை நிலையம் முன்பாக பொதுமக்கள் திரண்டு வந்து அதிகாலை முதல் மாலை வரை அங்கேயே காத்து கிடந்து வாங்கி சென்று வருகின்றனர்.
இந்த நிலைமையை தவிர்க்க அந்த விற்பனை நிலையத்திற்கு வரும் ரேசன் கார்டுதாரர்களை இரண்டாக பிரித்து நெரிசலை தவிர்க்க வேண்டி கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் மாலை 6 மணி வரை அந்த விற்பனை நிலையத்தில் மண்எண்ணெய் வாங்க காத்திருந்த கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மண்எண்ணெய் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் மண்எண்ணெய் கேன்களுடன் கோஷங்களை எழுப்பி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விற்பனை நிலையத்திற்கு பூட்டு போடுவோம் என ஆவேசமாக தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்ததாவது:- சேந்தமங்கலம் மண்எண்ணெய் விற்பனை நிலையத்தில் 3 லிட்டர் மண்எண்ணெய் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு கார்டுக்கும் வழங்க வேண்டும். ஆனால் அனைவருக்கும் முழுமையாக மண்எண்ணெய் வழங்குவது கிடையாது. அங்கு வாங்கிய 3 லிட்டர் எண்ணெயை மீண்டும் எடை போட்டால் 2 லிட்டர்தான் இருக்கும். இதை தவிர மண்எண்ணெய் வாங்குபவர்கள் விற்பனை நிலையத்திற்கு தாமதமாக வரும் பட்சத்தில் அவர்களுடைய மண்எண்ணெய் வெளி மார்க்கெட்டில் விற்கப்பட்டு வருகிறது. இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து 3 லிட்டர் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநிலை நீடித்தால் மண்எண்ணெய் வழங்காத விற்பனை நிலையத்திற்கு பூட்டு போடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் பொதுமக்களுக்கு மண்எண்ணெய் ஊற்றாததற்கு எந்திரம் பழுதானதே காரணம் என பணியாளர்கள் தெரிவித்தனர். இதனால் பல பெண்கள் மண்எண்ணெய் கிடைக்காமல் காலியான கேன்களுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story