தண்டையார்பேட்டையில் பாலிடெக்னிக் மாணவர் ஓட்டிய கார் மோதி 5 பேர் காயம் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்


தண்டையார்பேட்டையில் பாலிடெக்னிக் மாணவர் ஓட்டிய கார் மோதி 5 பேர் காயம் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்
x
தினத்தந்தி 28 Jan 2019 4:45 AM IST (Updated: 28 Jan 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

தண்டையார்பேட்டையில் பாலிடெக்னிக் மாணவர் ஓட்டிய சொகுசு கார் மோதி 5 பேர் காயம் அடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை இளையமுதலி தெருவில் வசிக்கும் தனது சித்தப்பா வீட்டுக்கு மதுரையை சேர்ந்த 17 வயது பாலிடெக்னிக் மாணவர், விடுமுறையில் வந்து உள்ளார். நேற்று மாலை அந்த மாணவர், தனது சித்தப்பா வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது சொகுசு காரை எடுத்து ஓட்டிப்பழகியதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த தெருவில் சாலையோரம் நிறுத்தி இருந்த ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து தள்ளியதுடன், தெருவில் நடந்து சென்ற 5-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீதும் மோதினார். இதில் வாகனங்கள் சேதமடைந்தன. 5-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அவரை விரட்டிப்பிடிக்க முயன்றனர். இதனால் பயந்துபோன மாணவர், காரை வேகமாக ஓட்டிச்சென்ற போது அங்குள்ள மரத்தில் கார் பயங்கரமாக மோதி நின்றது. இதில் சொகுசு காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

காரில் இருந்த மாணவரை மடக்கி பிடித்த பொதுமக்கள், தர்மஅடி கொடுத்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள், அந்த மாணவரை தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story