மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று மது விற்ற 11 பேர் கைது 652 மதுபாட்டில்கள் பறிமுதல்


மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று மது விற்ற 11 பேர் கைது 652 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Jan 2019 9:30 PM GMT (Updated: 27 Jan 2019 7:25 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று அரசு உத்தரவை மீறி மதுவிற்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 652 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல், 

குடியரசு தினத்தையொட்டி நேற்று முன்தினம் மது கடைகளை மூட அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை மீறி யாராவது மது விற்பனையில் ஈடுபடுகிறார்களா? என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் மேற்பார்வையில் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அரசின் உத்தரவை மீறி மது விற்பனை செய்ததாக செந்தில்குமார் (வயது 35), அசோகன் (42), சதீஷ்குமார் (45), ராஜா (34), செல்வி (45), திருப்பதி (61) ஆகிய 6 பேரை நாமக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 338 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசார் குப்புசாமி (50), ராஜூ (40), கந்தசாமி (40), அய்யன்காளை (42), வீரபாண்டி (35) என 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 314 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுகடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று அரசு உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக மொத்தம் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 652 மதுபாட்டில்கள் மற்றும் மதுவை கடத்த பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story