சேலத்தில், கும்பாபிஷேக விழாவுக்கு வந்த 2 மூதாட்டிகளிடம் 11¼ பவுன் நகை பறிப்பு
சேலத்தில் கும்பாபிஷேக விழாவுக்கு வந்த 2 மூதாட்டிகளிடம் 11¼ பவுன் நகை பறிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்,
சேலம் பெரமனூர் மாரியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பள்ளப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இதனிடையே விழாவில் பங்கேற்ற தாரமங்கலம் கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த மாரம்மா (வயது 80) என்பவரின் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகையை, கூட்டத்தில் புகுந்து யாரோ மர்ம ஆசாமிகள் பறித்து சென்று விட்டனர். இதே போன்று சேலம் 3 ரோடு வன்னியர் நகரை சேர்ந்த தங்கம்மாள் (60) என்பவர் அணிந்திருந்த 8¼ பவுன் நகையும் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் சாமி கும்பிட்டு விட்டு வெளியில் வந்து பார்த்த போது கழுத்தில் அணிந்திருந்த நகைகள் திருட்டு போனதை கண்டு இரண்டு பேரும் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக இருவரும் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மூதாட்டிகள் 2 பேரிடமும் மொத்தம் 11¼ பவுன் நகைகளை பறித்து சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட மூதாட்டிகளிடம் நடந்த நகை பறிப்பு சம்பவத்தால் நேற்று கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.