பாஸ்போர்ட் பெற போலி பிறப்பு சான்றிதழ் - 2 பேர் கைது


பாஸ்போர்ட் பெற போலி பிறப்பு சான்றிதழ் - 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Jan 2019 11:00 PM GMT (Updated: 28 Jan 2019 9:41 PM GMT)

தேனியில் பாஸ்போர்ட் பெறுவதற்கு போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து விண்ணப்பித்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

தேனி,

சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி ராயர்குலசாவடி தெருவை சேர்ந்த பொம்மையசாமி மகன் கண்ணன் (வயது 29). இவர், கடந்த 2012-ம் ஆண்டு மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பம் அளித்து இருந்தார். அந்த விண்ணப்பத்தில் ஆண்டிப்பட்டி தலைமையிடத்து துணை தாசில்தாரிடம் பிறப்புச் சான்றிதழ் பெற்றதாக ஒரு பிறப்புச் சான்றிதழை இணைத்து இருந்தார்.

அந்த சான்றிதழ் மீது சந்தேகம் எழுந்ததால் அதை பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அது போலியான பிறப்பு சான்றிதழ் என தெரியவந்தது.

இதையடுத்து பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் போலியான பிறப்பு சான்றிதழ் இணைத்து விண்ணப்பித்தது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தபால் மூலம் கடந்த மாதம் புகார் வந்தது.

அந்த புகார் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையை தொடர்ந்து கண்ணன் மீது கடந்த 26-ந்தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஓடைப்பட்டி நந்தவனத் தெருவை சேர்ந்த ஆண்டவர் (48) என்பவர் இந்த போலியான சான்றிதழை தயாரித்து கொடுத்ததாக கூறியுள்ளார். அதன்பேரில் ஆண்டவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story