சங்ககால புலவர் ஒக்கூர் மாசாத்தியர் பற்றி இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள நிகழ்ச்சி நடத்த கோரிக்கை
சங்ககால புலவர் ஒக்கூர் மாசாத்தியர் பற்றி இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த திருமலை கிராமத்தை சேர்ந்த டாக்டர் அப்துல்கலாம் நற்பணி மன்ற நிர்வாகி அய்யனார் தமிழக அரசிற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:– சிவகங்கையை அடுத்த ஒக்கூரில் பிறந்து வாழ்ந்தவர் மாசாத்தியார். இவர் சங்க காலத்தின் சிறந்த புலவராக திகழ்ந்தார். இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை மற்றும் புறநானூறு ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது. இவர் எழுதிய பாடல்களில் தமிழ் பெண்ணின் வீரத்தையும், துணிவு குறித்தும் கூறியிருக்கிறார்.
அந்த பாடலில், முதல் நாள் நடந்த போரில் ஒரு பெண்ணின் தந்தை மரணம், இரண்டாம் நாள் நடந்த போரில் அந்த பெண்ணின் கணவர் மரணம். இந்தநிலையில் 3–ம் நாள் நடைபெறும் போருக்கு தனது ஒரே மகனான சின்னஞ்சிறு பாலகனை அழைத்து, போர்க்களம் நோக்கி போ என்று அனுப்பி வைத்தாள் என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பாடலில் போருக்கு தன்னுடைய இள வயது மகனை அனுப்பிய பாடலை இயற்றிய மாசாத்தியார் தமிழரின் வீரம் குறித்து விவரித்துள்ளார்.
இத்தகைய வீரத்தை பறைசாற்றிய மாசாத்தியாருக்கு கடந்த 1989–ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் சிவகங்கையை அடுத்த ஒக்கூரில் நினைவுத்தூண் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து ஒக்கூரில் உள்ள திருப்பத்தூர்–சிவகங்கை சாலையில் அவருடைய நினைவுத் தூண் கடந்த 1991–ம் ஆண்டு திறக்கப்பட்டது.
தற்போது இந்த நினைவுத் தூண் தமிழ் வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. தமிழக அரசு கட்டிய இந்த நினைவுத் தூண் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும். இந்த நினைவுச்சின்னம் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விளக்கி, சங்ககால புலவர் மாசாத்தியார் குறித்த வரலாற்றை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.