திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் மனநல அவசர சிகிச்சை, மீட்பு மையம்


திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் மனநல அவசர சிகிச்சை, மீட்பு மையம்
x
தினத்தந்தி 30 Jan 2019 4:15 AM IST (Updated: 30 Jan 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மனநல அவசர சிகிச்சை, மீட்பு மையத்தை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார பணிகள் சார்பாக மாவட்டத்திலேயே முதல் முறையாக மனநல அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இதனை நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் 2 நோயாளிகளுக்கு துணி, துண்டு, பேஸ்ட் உள்பட பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கினார்.

இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மனநலம் குன்றி சாலைகளில் அனாதையாக சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோர்களை இந்த மையத்திற்கு அழைத்து வந்து அவர்கள் குணம் அடையும் வரை சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை 6384549613 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும், வாட்ஸ் அப் அல்லது குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்கலாம்.

இந்த மையத்தில் 3 மனநல மருத்துவர்கள், 5 நர்சுகள், 6 உளவியலாளர்கள் மற்றும் சமூக சேவகர்கள் என பலர் பணியாற்றுகின்றனர். இந்த மையம் மூலம் மனநலம் பாதிக்கபட்டவர்கள் குறித்து தகவல் கிடைத்தவுடன் முதலில் அவர்களை மீட்டு நீதிமன்ற உத்தரவு பெற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள்.

பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான முழுமையான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் குணம் அடைந்து தங்கள் இருப்பிடம் குறித்து தெரிவிக்கும் பட்சத்தில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் எம்.ஏ.ஷகீல்அகமது, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பாண்டியன், நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், மனநல அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜனார்த்தனன், சுரேஷ்குமார், தினேஷ்குமார் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

Next Story