காரிமங்கலத்தை சேர்ந்த நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


காரிமங்கலத்தை சேர்ந்த நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 31 Jan 2019 4:00 AM IST (Updated: 31 Jan 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலத்தை சேர்ந்த நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காரிமங்கலம்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் அனுமந்தபுரம் ஊராட்சி சொன்னம்பட்டி கலைஞர் நகரை சேர்ந்தவர் மாறன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவி, 5 மகள்கள், ஒரு மகன் இருந்தனர்.

அதில் ஒரு மகளான சங்கவி (16) சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். அதேபோல் இவரது அக்காள் மலர்வேணியும் அதே பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்பக்கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இதனால் சாந்தி சேலம் அம்மாப்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து மகள்கள் சங்கவி, மலர்வேணி, மாலதி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் சங்கவி சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் பயிற்சிக்காக சென்று வந்தார். பின்னர் அம்மாப்பேட்டையில் உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரை தாய் சாந்தி மற்றும் சகோதரிகள் 2 பேரும் சேர்ந்து மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சங்கவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் சாந்தி மற்றும் சகோதரிகள் இரவோடு இரவாக சங்கவியின் உடலை சொன்னம்பட்டி கலைஞர் நகரில் உள்ள வீட்டிற்கு எடுத்து வந்தனர். பின்னர் சங்கவி சொன்னம்பட்டி வீட்டில் சேலையால் தூக்கு போட்டு இறந்து விட்டதாக பொதுமக்களிடம் கூறியுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சங்கவி உடல் இருந்த வீட்டிற்கு முன்பாக கூடி சங்கவியின் தாய் சாந்தி மற்றும் மகள்கள் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் சங்கவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் நடந்த உண்மையை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சங்கவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காரிமங்கலம் போலீசார் சேலம் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல்் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story