நான் தி.மு.க.வில் இணையப்போகிறேன் என்று தவறான தகவல் பரவி வருகிறது தங்கதமிழ்செல்வன் பேட்டி


நான் தி.மு.க.வில் இணையப்போகிறேன் என்று தவறான தகவல் பரவி வருகிறது தங்கதமிழ்செல்வன் பேட்டி
x
தினத்தந்தி 31 Jan 2019 3:15 AM IST (Updated: 31 Jan 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

நான் தி.மு.க.வில் இணையப்போகிறேன் என்று தவறான தகவல் பரவி வருகிறது என்று தங்க தமிழ்செல்வன் கூறினார்.

திருவண்ணாமலை,

அ.ம.மு.க.வின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். பின்னர் அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் கிரிவலம் சென்றார்.

இதையடுத்து அவர் திருவண்ணாமலை போளூர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் தி.மு.க.வில் இணையப்போகிறேன் என்று தவறான தகவல்கள் பரவி வருகிறது. இதற்கு நான் பலமுறை விளக்கம் அளித்து விட்டேன். எங்கள் குடும்பம் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க.வில் இருந்து வருகிறது. எனது கட்சி அ.தி.மு.க., சின்னம் இரட்டை இலை தான்.

தற்போது நேரம் சரியில்லாமல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆரம்பித்து கட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக டி.டி.வி. தினகரன் தலைமையில் இந்த இயக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் ஜெயித்த பிறகு அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் கைப்பற்றி ஜெயலலிதாவின் ஆட்சி, ஊழலற்ற ஆட்சியை செய்வோம். தற்போது பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

கோடநாடு விவகாரத்தில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது கொலை, கொள்ளை குற்றசாட்டுகள் எழுந்து உள்ளன. இதற்கு அவர் குற்றவாளி இல்லை என்று உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.தருமலிங்கம், பஞ்சாட்சரம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story