இரவில் லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டாலும் திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பு


இரவில் லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டாலும் திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 1 Feb 2019 3:15 AM IST (Updated: 1 Feb 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

இரவில் லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டாலும் திம்பம் மலைப்பாதையில் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

தாளவாடி, 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இது தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய பாதையாகும். இந்த 2 மாநிலங்களில் இருந்தும் திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் பஸ், லாரி, வேன், கார், இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

திம்பம் மலைப்பாதை வழியாக அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் பழுதாகி நின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து இரவு நேரங்களில் அதாவது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் லாரிகள் செல்லவும், எந்த நேரத்திலும் 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள லாரிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி முதல் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரை காய்கறி ஏற்றி செல்லும் சரக்கு ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களும் திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல வனத்துறை திடீர் தடை விதித்தது. அதனால் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் லாரிகள், ஆசனூர் சோதனைச்சாவடி மற்றும் தமிழக கர்நாடக எல்லையான காரப்பள்ளம் பகுதியில் தடுத்து நிறுத்தப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் லாரிகள் பண்ணாரி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால் மறுநாள் காலை 6 மணி வரை ரோட்டின் இருபுறமும் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள், சரக்கு வேன், சரக்கு ஆட்டோ நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு நிறுத்தப்படும் லாரிகள் அனைத்தும் அடர்ந்த வனப்பகுதியில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நிற்கின்றன.

இதனால் மற்ற வாகனங்களான பஸ், கார், ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. இதன் காரணமாக கடந்த 1 மாதமாக தினமும் இரவு நேரத்திலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அதே போல் காலை 6 மணிக்கு மேல் அணைத்து லாரிகளும் ஒரே நேரத்தில் செல்ல அனுமதிக்கப்படுவதால் திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறும்போது, ‘திம்பம் மலைப்பாதை வழியாக லாரிகள் மற்றும் காய்கறி வாகனங்கள் இரவில் செல்ல தடை செய்வதற்கு முன்பு கூட வாரத்தில் 1 நாள்தான் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது தினமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story