தொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது


தொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Feb 2019 10:45 PM GMT (Updated: 1 Feb 2019 8:30 PM GMT)

தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தேனி,

கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்தவர்கள் சந்திரன் (வயது 45), ஜீவன் (28). இவர்கள் மீது நகைகள், ஆடு, மாடுகள் திருடியது தொடர்பான வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இவர்கள் இருவரும் சேர்ந்து வருசநாடு அருகே உள்ள சிங்கராஜபுரத்தை சேர்ந்த வேலுத்தேவர் மனைவி மீனாட்சி (80) என்பவரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து நகையை பறித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார். அதன்படி, மதுரை மத்திய சிறையில் உள்ள சந்திரன், ஜீவன் இருவரும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டனர்.

இதேபோல் மயிலாடும்பாறை அருகே உள்ள குமணன்தொழுவை சேர்ந்த லட்சுமணன் (54) என்பவர் மீது மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்பட 2 வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த 16-ந்தேதி, இவர் வழிப்பறி செய்ததாக மயிலாடும்பாறை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவரையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.

இதையடுத்து லட்சுமணன் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. சிறையில் இருக்கும் அவர் இந்த சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Next Story