தஞ்சையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது 2,178 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு


தஞ்சையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது 2,178 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Feb 2019 11:00 PM GMT (Updated: 2 Feb 2019 7:11 PM GMT)

தஞ்சையில், முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் 2,178 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான தஞ்சை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. போட்டிகளை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு வரவேற்றார்.

தொடக்க விழாவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) தேன்மதி, விளையாட்டு பயிற்றுனர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பளுதூக்குதல் பயிற்றுனர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

தடகளத்தில் ஆண்களுக்கு 100 மீட்டர், 800 மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டமும், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளும், பெண்களுக்கு 100 மீட்டர், 500 மீட்டர், 3 ஆயிரம் மீட்டர் ஓட்டமும், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளும் நடத்தப்படுகிறது.

நீச்சல் போட்டிகள் 50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ பிரிஸ்டைல், 50 மீ பேக் ஸ்ட்ரோக், 50 மீ பிரஸ்ட்ரோக், 50 மீ பட்டர்பிளை ஸ்ட்ரோக், 200 மீ ஐ.எம். பிரிவுகளிலும் ஆண்கள், பெண்களுக்கு நடைபெறுகிறது.

கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ், பூப்பந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகளும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது. இதில் பூப்பந்து போட்டிகள் மட்டும் தஞ்சை தூய பேதுரு மேல்நிலைப்பள்ளியில் நாளை(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. போட்டிகளில் 2 ஆயிரத்து 178 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறுபவருக்கு தலா ரூ.1000, 2-வது இடம் பெறுபவருக்கு ரு.750, 3-வது இடம் பிடிப்பவருக்கு தலா ரூ.500 பரித்தொகை வழங்கப்படும். இந்த போட்டிகள் வருகிற 5-ந் தேதி வரை நடக்கிறது.

Next Story