நிலத்தடி நீர்மட்டம் உயர பண்ணை குட்டை அமைக்க விவசாயிகள் முன்வர வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


நிலத்தடி நீர்மட்டம் உயர பண்ணை குட்டை அமைக்க விவசாயிகள் முன்வர வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 2 Feb 2019 10:30 PM GMT (Updated: 2 Feb 2019 8:04 PM GMT)

நிலத்தடி நீர்மட்டம் உயர விவசாய நிலங்களில் பண்ணை குட்டை அமைக்க விவசாயிகள் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடிபட்டி,

விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதில் தண்ணீரின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் அனைத்துவிதமான விவசாய பயிர்களும் தேவையான அளவு தண்ணீர் கிடைத்தால் மட்டுமே செழிப்பாக வளர்ந்து நல்ல மகசூல் கிடைக்கும். இந்த நிலையில் போதிய மழையின்மையால் பல பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

மேலும் ஒருசில பகுதிகளில் சராசரி மழையளவு மழை பெய்தபோதும் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதற்கு முறையான நீர்மேலாண்மை மற்றும் நீர் சேமிப்பு நடைமுறைகள் பின்பற்றாததே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

‘வறட்சி என்பது மழைக்குறைவால் மட்டும் ஏற்படுவதல்ல. மழை பெய்வதற்கு காரணமான இயற்கையை அழிப்பதும், மழைநீரை சேமிக்க தவறுவதுமே வறட்சிக்கான மிக முக்கிய காரணங்களாகும். மழைநீரைச் சேமிக்க நமது முன்னோர் ஏராளமான ஏரி, குளங்களை உருவாக்கினார்கள். மேலும் கோவில்கள் தோறும் தெப்பக்குளங்கள், ஊர்கள் தோறும் கிணறுகள் என்று பல மழைநீர் சேமிப்பு அமைப்புகளை உருவாக்கினார்கள்.

அத்துடன் ஒரு நீர்நிலை நிறைந்தால் அவற்றின் உபரிநீர் அடுத்த நீர்நிலைக்கு செல்லுமாறு கால்வாய் போன்ற கட்டமைப்புகளை உருவாக்கி பராமரித்துள்ளார்கள். ஆனால் இன்று மக்கள்தொகை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் விவசாய பயன்பாடு, தொழிற்சாலைகள் பயன்பாடு என்று தண்ணீருக்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் தண்ணீர் சேமிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்தப்படவும் இல்லை. முறையாக பராமரிக்கப்படுவதும் இல்லை. இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான்.

எனவே தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து விவசாயிகள் செயல்படவேண்டியது மிகவும் அவசியம். பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்துவரும் நிலையில், விவசாய நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு உதவியாக இருக்கும். மேலும் மழைக்காலங்களில் வீணாக செல்லும் மழைநீரை சேமித்து பயன்படுத்த முடியும்.

தண்ணீர் பற்றாக்குறை என்று ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க ஆர்வம் காட்டும் விவசாயிகள் பண்ணை குட்டைகள் அமைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது வேதனையான ஒன்றாகும். தற்பொழுது பண்ணை குட்டைகள் அமைப்பதற்கு அரசு மானியம் மற்றும் நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் மூலம் பண்ணை குட்டைகள் அமைக்க உதவி செய்தல் என்று அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

எனவே விவசாயிகள் அவற்றைப் பயன்படுத்தி தங்களுடைய விளைநிலங்களில் பண்ணை குட்டைகள் அமைக்க முன்வரவேண்டும். ஏற்கனவே பண்ணை குட்டைகள் அமைத்து பயன் பெற்றுள்ள விவசாயிகள் அதுகுறித்த ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் மற்ற விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் மற்ற நாடுகளைப்போல் ஆழ்குழாய் கிணறுகள், சொட்டுநீர்ப்பாசனம், தெளிப்புநீர்ப்பாசனம் என்று விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில் நமது முன்னோர் வழியில் மழை நீர் சேமிப்புக்கான நடவடிக்கைகளில் வேகம் காட்டவேண்டியது அவசியம். அதற்கு பண்ணை குட்டைகள் அமைப்பதும் சிறந்த வழியாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story