கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருவுக்கு பெருமாள் சிலையை கொண்டு செல்வதில் தாமதம்


கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருவுக்கு பெருமாள் சிலையை கொண்டு செல்வதில் தாமதம்
x
தினத்தந்தி 4 Feb 2019 10:15 PM GMT (Updated: 4 Feb 2019 5:43 PM GMT)

கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருவுக்கு பெருமாள் சிலையை கொண்டு செல்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில், விஸ்வரூப பெருமாள் சிலை அமைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். சிலை செய்ய 64 அடி உயரம் 26 அடி அகலம் கொண்ட பாறையை, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை மலையில் இருந்து 350 டன் எடையில் வெட்டி எடுக்கப்பட்டது.

இதில் முகம் மற்றும் இரண்டு கைகள் வடிவமைத்து, நவம்பர் 7–ந் தேதி 240 டயர்கள் கொண்ட லாரியில் புறப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 16–ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டைக்கு வந்தது. கடந்த பிப்ரவரி 1–ந் தேதி கிருஷ்ணகிரியை அடுத்த திப்பனப்பள்ளியில் சர்வீஸ் சாலையில் லாரி நிறுத்தப்பட்டது. அங்கு ஏராளமான பொதுமக்கள் சிலையை பார்த்துச் சென்றனர்.

இந்த நிலையில், குருபரப்பள்ளி அருகே உள்ள மார்க்கண்டேய நதியை பெருமாள் சிலை கடப்பதற்காக தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் முடிந்து, நேற்று காலை 2 என்ஜீன்கள் பொருத்தப்பட்டு லாரி புறப்பட்டது. மார்க்கண்டேய நதியில் அமைத்துள்ள தற்காலிக மண் சாலையில் லாரி பாதி தூரம் சென்றது. அதன் பிறகு மேடாக இருந்ததால் லாரி தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதனால் லாரி அங்கேயே நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து மண் சாலையில் ஜல்லிகற்கள் மற்றும் மண்ணைக் கொட்டி சமப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்தபின் பெருமாள் சிலை மேலுமலை நோக்கி செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலுமலையில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக எல்லையை பெருமாள் சிலை சென்றடைய சுமார் ஒரு வாரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெருமாள் சிலையை பெங்களூருவுக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


Next Story