தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்


தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x
தினத்தந்தி 4 Feb 2019 10:30 PM GMT (Updated: 4 Feb 2019 7:27 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

திருச்செந்தூர்,

தை மற்றும் ஆடி மாத அமாவாசை தினங்களில் இந்துக்கள் கடற்கரை, ஆற்றங்கரை உள்ளிட்ட நீர்நிலைகளின் அருகில் அமர்ந்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். தை அமாவாசை தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் திரளான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.இதையொட்டி அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவில் கடற்கரையில் குவிந்தனர். கடலில் பக்தர்கள் புனித நீராடி, கடற்கரையில் அமர்ந்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சாமி தரிசனம் செய்தனர்.

இதனை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலையில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து மற்றகால பூஜைகள் வழக்கம்போல் நடந்தது.

ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

இதேபோல் நேற்று அதிகாலையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் கடற்கரை, திரேஸ்புரம் கடற்கரை பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வந்தனர். அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு மந்திரங்கள் ஓதி, சிறப்பு பூஜைகள் செய்து, தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கடலில் புனித நீராடினர். இதனால் தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் நேற்று ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தெப்பக்குளத்தில் உள்ள அகத்தியர் தீர்த்தத்தில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் கசிந்த வண்ணம் வந்ததால், தெப்பக்குளத்தில் போதிய அளவு தண்ணீர் தேங்கி இருந்தது.

இதனால் தெப்பக்குளத்தின் படித்துறையில் பக்தர்கள் அமர்ந்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

இதேபோன்று கயத்தாறு அகிலாண்ட ஈசுவரி சமேத கோதண்ட ராமேசுவரர் கோவிலில் உள்ள ராமர் தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடிய பின்னர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையின் வடகால் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, திருமஞ்சன படித்துறையில் பக்தர்கள் புனித நீராடிய பின்னர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.இதேபோன்று முறப்பநாடு கைலாசநாத சுவாமி கோவில் படித்துறை, கருங்குளம் தாமிரபரணி ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் திரளான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.


Next Story