‘சேதமடைந்த சாலைகள் அடுத்த மாத இறுதிக்குள் சீரமைக்கப்படும்’கலெக்டர் பேட்டி


‘சேதமடைந்த சாலைகள் அடுத்த மாத இறுதிக்குள் சீரமைக்கப்படும்’கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 4 Feb 2019 11:29 PM GMT (Updated: 4 Feb 2019 11:29 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் அடுத்த மாதம்(மார்ச்) இறுதிக்குள் சீரமைக்கப்பட்டு விடும் என கலெக்டர் அன்பு செல்வன் தெரிவித்தார்.

கடலூர், 

சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கடலூர் மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து ஒரு பஸ்சில் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா கடலூர் பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பஸ்சில் உள்ள கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதில் அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டல மேலாளர் ஜே.சுந்தரம், செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன், துணை மேலாளர்கள் சேகர் ராஜா (தொழில்நுட்பம்), முகானந்தம்(இயக்கம்), உதவி மேலாளர்கள் கே.சுந்தரம்(வணிகம்), தியாகராஜன்(நியமனம்), பன்னீர்செல்வம்(கடலூர் பஸ்நிலையம்) மற்றும் கிளை மேலாளர்கள், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் என அனைத்து சேதமடைந்த சாலைகளும் அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் சீரமைக்கப்படும். இன்று(நேற்று) முதல் வருகிற 10-ந் தேதிவரை சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி, பேரணி, மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மாதந்தோறும் காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறையினர் கலந்துகொள்ளும் சாலை பாதுகாப்பு குறித்த கூட்டம் நடத்தி அதில் தேவையான பகுதிகளில் வேகத்தடை, எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் பிரதிபலிப்பான்கள், வெள்ளை சுண்ணாம்பு அடித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பாதாளசாக்கடை குழிகளால் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சாலை விபத்தினால் நிறைய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் தலையில் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்ல வேண்டும், 2 பேருக்கு மேல் பயணிக்க கூடாது, செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டிச்செல்லக்கூடாது, மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்ய கூடாது. சாலை பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story