கொடைரோடு அருகே லாரிகள் மோதல், டிரைவர் உடல் நசுங்கி பலி


கொடைரோடு அருகே லாரிகள் மோதல், டிரைவர் உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 5 Feb 2019 10:15 PM GMT (Updated: 5 Feb 2019 9:43 PM GMT)

கொடைரோடு அருகே நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் டிரைவர் உடல் நசுங்கி பலியானார்.

கொடைரோடு,

தூத்துக்குடியில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு நிலக்கரி ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை நெல்லை பாபா தெருவை சேர்ந்த காளியப்பன் (வயது 48) என்பவர் ஓட்டினார். திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் கொடைரோடு அருகே உள்ள சந்தோஷபுரம் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது நிலக்கரி ஏற்றி வந்த லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நிலக்கரி ஏற்றி வந்த லாரி டிரைவர் காளியப்பன் இருக்கையிலேயே உடல் நசுங்கி பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் இடிபாடுகளில் சிக்கி இறந்த காளியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொடைரோடு பகுதியில் சாலையோரங்களில் லாரிகள் நிறுத்தி வைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதுவே விபத்துக்கு வித்திடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே சாலையோரங்களில் லாரிகளை நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story