கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி


கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
x
தினத்தந்தி 7 Feb 2019 10:45 PM GMT (Updated: 7 Feb 2019 6:56 PM GMT)

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆர்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரை போக்கவும், உணவுக்காகவும் அங்குள்ள பறவைகள் கோடியக்கரை சரணாலயத்திற்கு லட்சக்கணக்கில் வருகின்றன.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை சீசன் காலமாகும்.

இதில் சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளில் இருந்து நான்கு அடி உயரமுள்ள பூநாரை(பிளமிங்கோ) ஆயிரக்கணக்கில் வருகின்றன. மேலும் கொசு உள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான்.

ஆஸ்திரேலியாவில் இருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, மியான்மரில் இருந்து சிறவி வகைகள், இலங்கையில் இருந்து கடல்காகம், ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆர்டிக்டேன் (ஆலா), இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகை பறவைகள் என 247 வகை பறவைகள் கோடியக்கரை சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன.

247 வகையான பறவைகளில் 50 வகையான நிலப்பறவைகளும், 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் ஆகும். உள்ளான் வகையான ஆலா மற்றும் கிரீன்சான்ங், சாங்க்பிளவர் உள்ளிட்ட 6 வகையான பறவைகள் மட்டுமே இங்கு முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்லும். மற்ற அனைத்து பறவைகளும் சீசன் காலத்தில் தங்கியிருந்து மட்டுமே செல்லும். கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி வீசிய கஜா புயலால் கோடியக்கரை சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்தன. மேலும் காடுகளில் மரங்கள் சாய்ந்ததால் மார்ச் மாதம் வரை தங்கும் பறவைகள் ஜனவரி மாதமே சரணாலயத்தில் இருந்து சென்று விட்டன. தற்போது உள்நாட்டு பறவைகள் மட்டும் காணப்படுகிறது.

இந்த நிலையில் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளின் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பணியில் வனத்துறையினர், கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர். கஜா புயல் காரணமாக இந்த ஆண்டு மிக குறைந்த அளவு பறவைகள் இருப்பதாக கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்தனர். 

Next Story