நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியாகும் முன்பு காங்கிரஸ் சார்பில் 50 பிரசார கூட்டங்கள் அசோக் சவான் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியாகும் முன்பு 50 பிரசார கூட்டங்களை நடத்த காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாக மாநிலத்தலைவர் அசோக் சவான் தெரிவித்தார்.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலை தேசியவாத காங்கிரசுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்க உள்ளது. இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில், தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் மும்முரம் காட்டி உள்ளது.
ஏற்கனவே ஜனசங்கர்ஷ் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியாகும் முன்பு மேலும் 50 ஜனசங்கர்ஷ் பொதுக்கூட்டங்களை நடத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு ஜனசங்கர்ஷ் மூலம் நான் ஏற்கனவே மாநிலத்தில் 6,500 கிலோ மீட்டர் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். இதன் மூலம் 120 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்து உள்ளேன். இவ்வாறு மக்களை சந்திக்கும் போது மத்திய, மாநில பா.ஜனதா அரசுகளின் தோல்விகளை எடுத்துரைத்து வருகிறேன். தகுதியற்ற மற்றும் மக்கள் விரோத அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து உள்ளனர். செல்லும் வழியெல்லாம் காங்கிரசுக்கு மக்கள் அமோக வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜனசங்கர்ஷ் மூலம் மேலும் 50 பிரசார கூட்டங்களை நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்த தீவிரம் காட்டி வருகிறோம். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பைத்தான் மற்றும் புனே நகரங்களில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story