விழுப்புரத்தில் பயங்கரம், காவலாளி கழுத்தை அறுத்து கொலை


விழுப்புரத்தில் பயங்கரம், காவலாளி கழுத்தை அறுத்து கொலை
x
தினத்தந்தி 8 Feb 2019 4:15 AM IST (Updated: 8 Feb 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் காவலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி உள்பட 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் கதிர்வேல் (வயது 48). இவருக்கு செண்பகவள்ளி(40) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். செண்பகவள்ளி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் விழுப்புரம் மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்து வருகிறார். கதிர்வேல் சென்னையில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

குழந்தைகள் இருவரும் கண்டம்பாக்கத்தில் உள்ள செண்பகவள்ளியின் தாய் வீட்டில் தங்கி படித்து வருகிறார்கள். கடந்த 1½ மாதத்துக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த கதிர்வேல் தனது மனைவியுடன் விழுப்புரம் சாலாமேடு கிழக்கு வி.ஜி.பி. நகரில் உள்ள ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் இவர்களது குடிசைவீடு மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி விழுப்புரம் தீயணைப்பு நிலையத்துக்கும், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்ததோடு, தீ விபத்தில் யாரும் சிக்கி உள்ளார்களா? என வீட்டுக்குள் சோதனையிட்டனர்.

அப்போது கதிர்வேல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். செண்பகவள்ளியை காணவில்லை. இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் கதிர்வேல் உடலை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் அங்கு வந்த செண்பகவள்ளியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், நான் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள வயல்வெளிக்கு சென்றுவிட்டேன். அந்த சமயத்தில் மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து எனது கணவரை கழுத்தை அறுத்து கொலை செய்ததோடு, வீட்டுக்கும் தீ வைத்து எரித்து சென்றுவிட்டதாக போலீசாரிடம் கூறினார்.

இந்த கொலை சம்பவத்துக்கும் செண்பகவள்ளிக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து செண்பகவள்ளி உள்ளிட்ட 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே கதிர்வேலின் உடலை கைப்பற்றிய போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story