நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் 63 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்


நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் 63 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2019 4:15 AM IST (Updated: 9 Feb 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 63 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தின் 5-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு தமிழக கவர்னர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

விழாவில் 4 மாணவர்களுக்கு முனைவர் பட்டங்கள், 11 மாணவர்களுக்கு முதுநிலை மீன்வள அறிவியல் பட்டங்கள், 48 மாணவர்களுக்கு இளநிலை மீன்வள அறிவியல் பட்டங்கள் என மொத்தம் 63 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை கவர்னர் வழங்கினார். வெவ்வேறு கல்வி சாதனைகளுக்காக 37 பதக்கங் களையும் மாணவர்களுக்கு அவர் வழங்கினார். இதில் மாணவர் விஷ்வந்த் அதிகபட்சமாக 7 பதக்கங்களை பெற்று தனது இளநிலை பட்டப்படிப்பிற்காக முதலிடம் பெற்றார்.

முனைவர் பட்டப்படிப்பில் சிவராமன் ஒரு பதக்கமும், முதுநிலை பட்டப்படிப்பில் சந்தோஷ் 5 பதக்கங்களையும், ஹம்சவள்ளி 3 பதக்கங்களையும், எழில்மதி 2 பதக்கங்களையும், பிரேமா, பிரியதர்சினி மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் தலா ஒரு பதக்கமும் பெற்றனர்.

இளநிலை மீன்வளப்பட்டப்படிப்பில் சுபஸ்ரீதேவசேனா 2 பதக்கங்களையும், நவீன் ராஜேஸ்வர் மற்றும் கிருத்திகா ஆகியோர் தலா ஒரு பதக்கமும் பெற்றனர்.

முன்னதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பெலிக்ஸ் வரவேற்று, ஆண்டு அறிக்கையை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மீன்வள பல்கலைக்கழகமானது 8 கல்லூரிகள், 5 இயக்குனரகங்கள், 40 ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையங்கள், ஒரு வேளாண் அறிவியல் மையம் மற்றும் 3 மீன்வள தொழிற்கல்வி நிலையங்களை கொண்டுள்ளது. அவற்றில் 200 ஆசிரியர்கள் மற்றும் 900 மாணவர்கள் உள்ளனர். ஈரான் உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கல்வியின் உலகத்தரத்தை உறுதிசெய்ய பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்கள், நீர்வாழ் உயிரின வளர்ப்பில் முன்னணி வகிக்கும் தெற்காசிய நாடுகளில் பண்ணை அனுபவம் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த புதுமை திட்டத்தின் மூலம் அண்மையில் 6 மாணவர்கள் வியட்நாம் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பல்கலைக்கழகத்தில் ரூ.60 கோடி மதிப்பிலான 38 ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் ஒப்புதலுடன், பி.டெக்(மாலுமிக்கலை அறிவியல்), பி.டெக்(சக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்), அதிதீவிர மீன்பிடிப்பு தொழில்நுட்பம் மற்றும் அதிதீவிர நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்பம் ஆகிய சிறப்பு பிரிவுகளில் இரண்டு புதிய இளங்கலை மீன்வள தொழில்காப்பு பட்டப்படிப்புகள் என புதிய படிப்புகள் இந்த கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் உலக உணவு உற்பத்தி விருது பெற்ற விஜய் குப்தா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அரசு முதன்மை செயலாளர் கோபால், மாணவர்களின் மீன்வள கல்வி சாதனைக்கென 4 புதிய விருதுகளை அறிவித்தார்.

வருங்காலத்தில் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என்ற உறுதிமொழியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாசிக்க, பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

விழாவில் கலெக்டர் சுரேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், அரசு அதிகாரிகள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story