நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தவறி விழுந்து இறந்த அர்ச்சகரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அமைச்சர் தங்கமணி வழங்கினார்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தவறி விழுந்து இறந்த அர்ச்சகரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.
நாமக்கல்,
நாமக்கல் கோட்டை சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). அர்ச்சகரான இவர் விடுமுறை நாட்களில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பணிவிடை செய்ய வருவது வழக்கம். அந்த வகையில் குடியரசு தினத்தன்று ஆஞ்சநேயருக்கு பணிவிடை செய்ய வந்தார்.
இங்கு 8 அடி உயரத்தில் பலகையில் நின்று கொண்டு ஆஞ்சநேயருக்கு மலர்மாலை அணிவித்து கொண்டு இருந்தபோது, அவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அர்ச்சகர் வெங்கடேசனின் குடும்பத்தினருக்கு கோவில் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருந்தார். நேற்று தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் அர்ச்சகர் வெங்கடேசனின் வீட்டிற்கு நேரில் சென்று ரூ.5 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேகம் செய்தபோது தவறி விழுந்து இறந்த அர்ச்சகர் வெங்கடேசனின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் இரங்கல் தெரிவித்ததோடு, ரூ.5 லட்சம் நிவாரண நிதி கொடுத்து உள்ளார். அதற்கான காசோலை வழங்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே அந்த குடும்பத்தினர் வாரிசுதாரருக்கு வேலைவாய்ப்பு கேட்டு உள்ளனர். அது முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. உரிய நேரத்தில் அது குறித்து பரிசீலிக்கப்படும்.
கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சென்னையில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு உள்ளனர். ஆன்மிக விதிக்கு உட்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்பதற்காக பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள். தற்போது தடுப்பு பலகை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான ‘மாடல்’ சென்னையில் இருந்து வந்துள்ளது. உரிய காலத்தில் பாதுகாப்பு ஏற்பாடு செய்து முடிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.
அப்போது நாமக்கல் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர், இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டல இணை ஆணையாளர் வரதராஜன், உதவி ஆணையாளர் ரமேஷ், கண்காணிப்பாளர் சாமிநாதன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story