குமரி மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி ஊர்வலம்
குமரி மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி ஊர்வலம் நேற்று புறப்பட்டது.
மணவாளக்குறிச்சி,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து காவடி ஊர்வலங்கள் புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி, மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம் நேற்று புறப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் பறக்கும் வேல்காவடிக்கு பூஜை, கணபதி ஹோமம், வேல் தரித்தல் போன்றவை நடந்தது.
நேற்று யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு தீபாராதனை நடந்தது.
மாலையில் பறக்கும் வேல் காவடிகள், புஷ்ப காவடிகள் திருச்செந்தூருக்கு புறப்பட்டன. இந்த காவடி ஊர்வலம் மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை, ராஜாக்கமங்கலம் வழியாக சென்றது.
வடக்கன்பாகம் தர்ம சாஸ்தா கோவிலிலும் வேல்தரித்தல், காவடி பூஜைகள், அன்னதானம், காவடி அலங்காரம் போன்றவை நடந்தது. நேற்று காவடி ஊர்வலம் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று அங்கு தீபாராதனை நடந்தது.
மாலையில் பறக்கும் காவடி ஊர்வலம் திருச்செந்தூருக்கு புறப்பட்டது. இதுபோல், சேரமங்கலம் ஆழ்வார்கோவிலில் இருந்தும் பறக்கும் வேல்காவடி ஊர்வலம் திருச்செந்தூருக்கு சென்றது.
குளச்சலில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து பக்தர்கள் பறக்கும் காவடி, வேல்காவடி எடுத்தும், சிறுவர்கள் முருகன் வேடம் அணிந்தும், குளச்சல் போலீஸ் நிலைய பகுதிக்கு வந்தனர்.
அங்கு காவடிகளை வரவேற்க ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். பின்னர் காவடிகள் திங்கள்சந்தை வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றது.
இரணியல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இரணியல்கோணம், நெய்யூர், தலக்குளம் போன்ற பகுதிகளில் இருந்து காவடி ஊர்வலங்கள் புறப்பட்டு திங்கங்சந்தையில் உள்ள ராதாகிருஷ்ணன் கோவிலுக்கு வந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், அங்கிருந்து பறவை காவடி உள்பட பல்வேறு காவடிகள் ஊர்வலமாக திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டன. இந்த ஊர்வலம் கண்டன்விளை, தோட்டியோடு, நாகர்கோவில் வழியாக சென்றது. ஊர்வலத்தையொட்டி திங்கள்சந்தை நகரில் நேற்று போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.
Related Tags :
Next Story