தேனியில், கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம்


தேனியில், கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம்
x
தினத்தந்தி 12 Feb 2019 4:00 AM IST (Updated: 11 Feb 2019 10:36 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளது.

தேனி, 

தேனியில், பெரியகுளம் சாலையில் வாரச்சந்தை வாரந்தோறும் சனிக்கிழமை நடக்கும். இந்த சந்தைக்கு பெரியகுளம், கம்பம், போடி மற்றும் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். காய்கறிகள் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இதுதவிர கேரளாவில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர். இதனால் சந்தையில் எப்போதும் கூட்டம் அலைமோதும். இதை பயன்படுத்தி மர்மநபர்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வருகின்றனர். இதை வியாபார மும்முரத்தில் வியாபாரிகளும் கவனிப்பதில்லை. குறிப்பாக 200, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் விடப்படுகிறது.

இந்த நிலையில் பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது 45). இவர், தேனி வாரச்சந்தையில் தள்ளுவண்டியில் வெள்ளைப்பூண்டு வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரூ.200 கொடுத்து அரை கிலோ வெள்ளைப்பூண்டு வாங்கியுள்ளார். பின்னர் மீதி சில்லறையை வாங்கிவிட்டு அவர் சென்றார்.

சிறிது நேரம் கழித்து பாண்டியம்மாள் அந்த நோட்டை சோதனை செய்தபோது, அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியம்மாள், அந்த முதியவரை தேடியுள்ளார். ஆனால் அவரை காணவில்லை. இதுகுறித்து தேனி போலீசில் நேற்று முன்தினம் பாண்டியம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் சமீப காலமாக கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவது அதிகரித்துள்ளது. வாரச்சந்தை, வியாபார கடைகள், மதுக்கடைகளை ‘குறி’ வைத்து மர்ம நபர்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுகின்றனர். எனவே கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story